Skip to main content

ரஜினிக்கு பாராட்டு விழா; உற்சாகத்தில் ரசிகர் மன்றத்தினர்

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

superstar rajini function preparedness in vellore district 

 

சென்னையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் மார்ச் 26 ஆம் தேதி பிரமாண்டமான விழா நடத்துகின்றனர். இதற்காக சென்னையின் 5 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இரண்டு கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனிடையே பிப்ரவரி 26ஆம் தேதி வாலாஜாவில் ஒரு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் 200க்கும் அதிகமான மன்றத்தின் மாநகர, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ரஜினிக்கு சென்னையில் நடைபெறும் பாராட்டு விழா பொதுக்கூட்டத்தில் ரசிகர்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

விழாவை எப்படியெல்லாம் சிறப்பிக்கலாம் என கலந்தாலோசனை நடத்தினர். ரஜினிக்கு நடைபெறும் பாராட்டு விழா நிகழ்ச்சி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியாகவும் நடைபெறும் என்கிறார்கள் ரஜினி ரசிகர் மன்றத்தினர். வறுமை நிலையில் உள்ள ரஜினி ரசிகர்கள் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சிகள், பிற நடிகர்கள் ஆச்சரியப்படும் அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளனர். இதற்கான வேலைகள் 90 சதவிகிதம் முடிந்த நிலையில் இதுகுறித்து ரஜினிக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அவர் அதனைப் பார்த்தும், கேட்டும் ஆச்சரியமடைந்தவர், மகிழ்ச்சியடைந்து விழாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

 

இந்த நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள் கலந்து கொள்வதோடு, திரை பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான டைட்டில் வெளியிடும் நிகழ்ச்சியும் சினிமா டைட்டில் வெளியிடுவது போன்று திரை நட்சத்திரங்களை வைத்து வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினிகாந்த் அறிவித்த பின்னர், அவரது மன்ற நிர்வாகிகள் பலர் வேறு கட்சிகளுக்கு சென்றனர். அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் சோர்ந்து போயினர். குறைந்த ரசிகர்களே தலைவர் அரசியலுக்கு வராததே நல்லது என அவரது முடிவுக்கு கட்டுப்பட்டு, என்றும் அவரே எங்கள் தலைவர் எனக் கொண்டாடுகின்றனர். அரசியல் முடிவு, ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் பாலமாக இருந்த மன்றத்தின் தலைமை நிர்வாகி சுதாகர் மறைவு போன்றவற்றால் சோர்ந்து போய் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு இந்த பாராட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவி நிகழ்ச்சி மீண்டும் புத்துணர்ச்சியை தரும் என்கிறார்கள் மன்ற நிர்வாகிகள். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ - வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Vellore Collector warns that action will be taken against sale of illicit liquor

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கள்ள சந்தையில் மது விற்பனை தொடர்பாக நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 57 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக மாவட்டம் முழுவதும் மற்றும் அணைக்கட்டு, ஒடுக்கத்தூர், பேர்ணாம்பட்டு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் தீவிர சாராயத் தேடுதல் வேட்டை  நடைபெற்று வருகிறது. இதில் பேரணாம்பட்டு சாத்கர் மலைப்பகுதியில் வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் நேரடியாக களத்தில் இறங்கி சோதனை மேற்கொண்டு தீவிரம் காட்டி வருகிறார்.

மேலும் மலைப்பகுதியில் ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் கள்ளச்சாராய ஊரல்கள் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருட்களை கண்டுபிடித்து  அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

அப்போது பேசிய ஆட்சியர் சுப்புலெட்சுமி, "வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கும்பொருட்டு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. அதன்படி மாவட்டத்திலுள்ள 20 உள்வட்டங்களுக்கு தலா 1 குழு வீதம் 20 குழுக்களும், மாவட்டத்திலுள்ள 5 மலைக் கிராமங்களுக்கு 1 குழு வீதம் 5 குழுக்களும் என மொத்தம் 25 குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.

மலைக் கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வனத்துறையின் சார்பில் சோதனை சாவடிகளில் கண்காணிப்பினை தீவிரப்படுத்த வேண்டும். காவல்துறையின் சார்பில் வனத்துறையினருக்கு சோதனை சாவடிகளுக்கு தேவையான முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். மேலும் வனத்துறையின் சார்பில் வனப்பகுதிகளில் அவ்வப்பொழுது திடீர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

போதைப் பொருட்களின் விற்பனை கண்டறியப்பட்டால் தொடர்புடைய வணிக நிறுவனம் அல்லது கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்துதுறை அலுவலர்களும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தங்களுக்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். உத்தரவை பின்பற்றாத அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், "என எச்சரிக்கை விடுத்தார்.

Next Story

தேர்தலில் வெற்றி; கோ பூஜை செய்து வழிபட்ட கதிர் ஆனந்த் எம்.பி

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Kathir Anand MP, who worshipped God Pooja after winning the election

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம்பி கதிர் ஆனந்த் 2,15,702 வாக்குகள் முன்னிலையில் வெற்றி பெற்றார். வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 103364 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் வாணியம்பாடி நகரப் பகுதிகளில் நன்றி தெரிவிக்க வந்திருந்த எம்பி கதிர் ஆனந்த் வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியில் உள்ள அழகு பெருமாள் ஆலயத்தில் கோ பூஜை செய்து வழிபாடு நடத்தி பின்னர் அருகில் இருந்த தர்காவிற்கும் சென்று பிரார்த்தனை செய்தார். 

Kathir Anand MP, who worshipped God Pooja after winning the election

பின்னர் பேசிய கதிர் ஆனந்த், வேலூர் பாராளுமன்ற தொகுதி சுதந்திரம் பெற்ற நாள் முதலாய் இதுவரை யாரும் வெற்றி பெறாத வகையில் அதிகபட்ச வாக்குகளை அளித்து என்னை வெற்றி பெற செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக வாணியம்பாடி மக்கள் அதிகப்படியான வாக்குகளை அள்ளித் தந்து என்னை வெற்றி பெற செய்துள்ளனர். என்னை இனி காட்பாடி கதிர ஆனந்த் என்று அழைக்காமல் வாணியம்பாடி கதிர் ஆனந்த் என்றே அழைக்கலாம் அந்த அளவுக்கு வாணியம்பாடி மக்களுக்கு என் மீது உரிமை உள்ளது எனவும், எனது அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் எனவும் பொது மக்களிடையே திறந்தவெளியில் நின்று நன்றி தெரிவித்தார்.

பின்னர் வாணியம்பாடி பேருந்து நிலையம், கோனாமேடு, பெருமாள் பேட்டை, நியூடவுன், உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.