கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவலைக் கட்டுபடுத்த பல்வேறு கட்டுபாடுகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதில் முக்கியமானது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு. அவற்றை முறையாகவும், முழுமையாகவும் அமல்படுத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, திருச்சி மாநகர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட 8 சோதனைச் சாவடிகள், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளைக் கண்டறிந்து தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டது. திருச்சி மாநகரின் முக்கிய சந்திப்புகளான மத்திய பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், டி.வி.எஸ். டோல்கேட், மன்னார்புரம் சந்திப்பு ஆகிய முக்கிய சாலை சந்திப்புகளில் காவல் ஆய்வாளர் தலைமையிலும் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலும் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டது.
இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோரை நிறுத்தி விசாரணை செய்து, முகக்கவசம் அணிந்து வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் காரணமின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டது. மேலும் மாநகரில் கூட்டம் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடைகள் அருகில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், விதிகளை மீறும் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராத தொகையும் வசூல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் தேதி அன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து முகக்கவசம் அணியாமல் வந்த 9734 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.19,46,800/- அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியின்றி செயல்பட்டவர்கள் மற்றும் ஊரடங்கின்போது கடைகளைத் திறந்து வைத்திருந்த நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் ரூ.21 இலட்சம் அபராதத் தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளது.