திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில் இடிமின்னலுடன் கனமழை பெய்தது. நேற்று (09/05/2022) காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இரவு சூறாவளியுடன் மழை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்று வீசியதால் பல்வேறு கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதேபோன்று சென்னை மாநகரில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. வியாசர்பாடி, சைதாப்பேட்டை, ஆவடி, சேத்துப்பட்டு, அனகாபுத்தூர், மேடவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், புரசைவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது. விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது.
இதனிடையே, வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'அசானி' புயல் கரையைக் கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்புமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.