Skip to main content

கொட்டும் மழையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Study of Minister Udayanidhi Stalin in rain

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

அதே சமயம் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை வி.பி. ராமன் சாலையில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்த மலையாள படக்குழு

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
minister udhayanidhi appreciate Manjummel boys crew

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 22ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. ‘பரவா பிலிம்ஸ்’ தயாரிப்பில் உருவாக்கியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடல் ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை படக்குழு படத்தில் பயன்படுத்தியுள்ளது. அதனால் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 நாட்களில் ரூ.50 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய நாட்களில் ரூ.50 கோடி வசூலித்த மலையாள படங்களில் ஒன்றாக இப்படம் பேசப்படுகிறது. 

இப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கம் வாயிலாக ’மிஸ் பண்ணக்கூடாத படம்” என குறிப்பிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு அமைச்சர் உதயநிதியை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த உதயநிதி, “மலையாளத்தில் சமீபத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், அத்திரைப்படக் குழுவினரை இன்று நேரில் சந்தித்தோம். நாம் அப்படத்தை பாராட்டியதற்காக அவர்கள் நன்றி தெரிவித்து அன்பை வெளிப்படுத்தினர். ஒளிப்பதிவு, பின்னணி இசை, திரைக்கதை, காட்சி அமைப்பு என அனைத்து வகையிலும் தரமான படைப்பாக மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை தந்த படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

அரசுப் பேருந்துகளில் புதிய வசதியைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Minister Udayanidhi started a new facility in government buses

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரக அலுவலகத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 புதிய பேருந்துகள் இயக்கத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (28.02.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், பாரத ஸ்டேட் வங்கியுடன் (SBI) இணைந்து மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் (Electronic Ticketing Machine) மூலமாக மின்னணு பயணச்சீட்டு (e-Ticketing) வழங்கும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமை தாங்கினார்.

இந்த திட்டத்தினால் பயணச்சீட்டு வழங்கும் வேகம் மற்றும் எளிதான பயன்பாட்டிற்காக, பேருந்துகளில் மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நடத்துநர்கள் இதன் மூலம் பயணிகளிடம் ரொக்கப் பணம், ஏடிஎம் அட்டை, கடன் அட்டை மற்றும் யூபிஐ மூலம் பணம் பெற்றுக் கொண்டு, பயணச் சீட்டு வழங்குவார்கள். இதனால் பேருந்துகளில் பயணிகள் ரொக்கப் பணம் எடுத்துச் செல்லாமல் பயணச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு நடைவாரியாகவும் மற்றும் நிலை (ஸ்டேஜ்) வாரியாகவும் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் வசூல் விவரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ்,  இணை மேலாண் இயக்குநர் .க.குணசேகரன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன், அரசு உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.