சேலத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் பள்ளியின் குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்ததற்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்துள்ளது குப்பம்பட்டி ஊராட்சி. அங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் ஒரு சில மாணவர்கள் பள்ளியின் மேல் பகுதியில் இருந்த மேல்நிலை நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யப் பணிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனைப் பார்த்த பொதுமக்கள் இந்தக் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இதனையறிந்த கல்வித்துறை அதிகாரிகள் இன்று திடீரென குப்பம்பட்டி நடுநிலைப் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியின் மற்ற ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனால் பெற்றோர்களும்,பொதுமக்களும் அங்கு கூடிய நிலையில் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.