
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மேமாத்தூர் பகுதியில் மணிமுக்தா நதியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பணை கட்டப்படுவதற்கு முன்பு ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இதன் வழியாக இளங்கியனூர், மு.புதூர், சின்னப்பரூர், மு.பரூர், பிஞ்சனூர் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராம பொதுமக்கள் தினசரி நல்லூர் பகுதிக்கு வேலைக்காகவும், வியாபாரத்திற்காகவும், விவசாய பொருட்கள் வாங்கவும் விற்கவும் வந்து செல்கின்றனர். அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கும் சென்று வருகின்றனர்.
இந்த தடுப்பணை கட்டிய பிறகு மழை வெள்ள காலத்தில் அணையின் உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் ஓடிக் கொண்டிருப்பதால் தரைப்பாலம் முற்றிலுமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் அப்பகுதி ஆழம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. இதனை உணராமல் பள்ளி மாணவர்கள் பள்ளி செல்ல வேறு வழியில்லாததால் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து சென்று வருகின்றனர். இதனால் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே உடனடியாக அப்பகுதியில் மேம்பாலமோ அல்லது தரைப்பாலமோ அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.