கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே புயல் காரணமாக மழை பொழிந்த நிலையில் நீர்நிலைகள் பல இடங்களின் நிரம்பி காணப்படுகிறது. தொடர் நீர்வரத்து காரணமாக நீர்நிலைகளில் பொதுமக்கள் குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ, துணி துவைக்வோ கூடாது என மாவட்ட நிர்வாகம் பல்வேறு எச்சரிக்கைகளை வெளியிட்டு இருந்தது. ஒரு சில நாட்களுக்கு பிறகு கடலூரில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அரசு ஐடியில் படித்து வரும் நான்கு மாணவர்கள் நத்தப்பட்டு ஆஞ்சநேயர் கோவில் எதிர்புறத்தில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர்.
தென்பெண்ணை ஆற்றின் வெள்ள நீர் குளத்தில் நிரம்பி வழியும் நிலையில் மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது கதிர் என்ற மாணவனின் காலில் தாமரைக் கொடி சுற்றிக்கொண்டு சிக்கிக்கொண்டார். உடன் இருந்த மாணவர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் கதிர் தண்ணீருக்குள் மூழ்கினார் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த மீட்புப் படையினர். சுமார் 4 மணி நேரமாக குளத்தில் மூழ்கிய மாணவன் கதிரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் கூடியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.