
திருச்சி வயலூர் சாலை புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் நலச் சங்கம் சார்பாக இன்று திருச்சி கோ. அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு நலச் சங்கத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மேலும் அச்சங்கத்தின் செயலாளர் காளிமுத்து, பொருளாளர் கரிகாலன் ரவி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இந்த போராட்டத்தில் பேசிய அவர்கள்; ‘காந்தி மார்க்கெட், உறையூர் மீன் மார்க்கெட், உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள வியாபாரிகள் அனைவரும் கரோனா காரணமாக கடை வாடகை, கடை தொழில் வரி பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட வரிகளை கஷ்டமடைந்த போதிலும் செலுத்தித் தான் வருகிறோம். இந்த நிலையில், கரோனா தாக்கத்தினால் வரிகளை செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

அதைத்தொடர்ந்து கரோனா தொற்றுநோய் வந்ததற்கு பிறகு எங்கள் பகுதி வியாபாரிகள் கடைகளுக்கு அருகிலேயே தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், மினி ஆட்டோகளில் காய்கறிகள் பழங்கள், மளிகை பொருட்களை விற்று வருகிறோம். குறிப்பாக மாநகராட்சி எல்லைக்குட்பட்ட உய்யகொண்டான் திருமலை ஆற்றுப்பாலம் வண்ணாரப்பேட்டை பூங்கா அருகில் புதிதாக கலைஞர் வாரச்சந்தை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் பகுதி வியாபாரிகள் அனைவரும் பெரும் இழப்பையும் மன உளைச்சலையும் சந்தித்து வருகிறோம்.
ஆகவே உய்யகொண்டான் திருமலை மற்றும் வண்ணாரப்பேட்டை பூங்கா அருகில் நடைபெறும் வாரச்சந்தையை நடத்தக் கூடாது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடமும் அதிகாரிகளிடமும் மனு கொடுத்துள்ளோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் காரணமாக இன்று அதை வலியுறுத்தி கோ. அபிஷேகபுரம் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளோம்’ என்று தெரிவித்தனர்.