Skip to main content

ஆ. ராசா எம்.பி.க்கு எதிராகப் போராட்டம்; திருச்சியில் பரபரப்பு

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
struggle against A. Rasa MP in Trichy

நாமக்கல்லில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா எம்.பி சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி.யை பற்றி இழிவாகப் பேசியதைக் கண்டித்தும், ஆ. ராசா மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வெள்ளாளர் முன்னேற்றச் சங்கம் மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலை முன்பு நிறுவனத் தலைவர் ஆர்.வி. ஹரிஹரன் தலைமையில் பிப்ரவரி 10 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆறுநாட்டு சோழிய வேளாளர் சங்கத்தின் தலைவர் சிவானி செல்வராஜ், அகில இந்திய வ.உ.சி பேரவை இளைஞர் அணி தலைவர் வையாபுரி, சோழிய வேளாளர் நலச்சங்கம் பாலு, நேருஜி, வெள்ளாளர் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வக்கீல் டோமினிக் செல்வம், மாவட்டத் தலைவர் வக்கீல் குமரேசன், இளைஞரணி தலைவர் குளித்தலை உதயா, பொருளாளர் அழகு முருகன், காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் வக்கீல் செந்தில்நாதன், காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத் தலைவர் எம்.கே. கமலக்கண்ணன், தில்லை நகர் கிருஷாந்த் சுப்பிரமணியன், காரு காத்த சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், ஆண்டாள் தெரு ஸ்ரீதர், உறையூர் மோகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆ. ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது ஆ. ராசாவின் உருவப்படத்தை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆ. ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் திருச்சி நீதிமன்றம் அருகில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஹரிஹரன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

அண்ணனை கொலை செய்த தம்பி; உடந்தையாக இருந்த தாயும் கைது

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
The brother who attack his brother; The accomplice mother was also arrested

குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை தம்பி கொலை செய்ததும், அதற்கு உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பீமநகர் சேர்ந்தவர் பர்வீன் பானு (வயது 48). இவருக்கு தமிமுன் அன்சாரி (வயது 33), சையது அபுதாஹிர் ( 29) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தமிமுன் அன்சாரி ஆட்டோ டிரைவராகவும், டீ மாஸ்டராகவும் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 5 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

குடி போதைக்கு அடிமையான தமிமுன் அன்சாரியின் நடவடிக்கை பிடிக்காததால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் தினமும் தமிமுன் அன்சாரி தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். நேற்று இரவு தனது தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட தம்பி சையது அபுதாஹிர் வீட்டில் இருந்த  அரிவாளால் தமிமுன் அன்சாரியின் தலையில் வெட்டினார். இருப்பினும் ஆத்திரம் அடங்காமல் அவரது கழுத்தில் மின்வயரை சுற்றி இறுக்கினார். இதில் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே தமிமுன் அன்சாரி இறந்து விட்டார். விபரீதத்தை உணர்ந்த பர்வீன் பானு அதிகாலை 4 மணி அளவில் யாரும் அறியாத வகையில் சையது அபுதாகீருடன் சேர்ந்து தமிமுன் அன்சாரியின் உடலை அவரது ஆட்டோவிலேயே ஏற்றிக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் நீரில் போட்டு விட்டு வர முடிவு செய்தார்.

அதன்படி கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் உடலை இறக்கும் போது இருசக்கர வாகனங்கள் வரவே உடலை அங்கேயே போட்டுவிட்டு ஆட்டோவில் தப்பி விட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.பாலத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவினை ஆய்வு செய்து ஆட்டோ நம்பரை கண்டுபிடித்தனர். பின்னர் ஆட்டோ உரிமையாளர் யார்?  மாநகர  சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் கொலையாளிகள் பர்வீன் பானு மற்றும் சையது அபுதாகிர் என உறுதி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து வீட்டில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

பாதயாத்திரை விபத்தில் பலியான 5 பேர்; நிவாரணத் தொகையை வழங்க அமைச்சர்கள்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
5 lose their live in padayatra accident; Ministers to provide relief amount

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற போது விபத்தில் பலியான 5 பக்தர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்லாக்கோட்டை ஊராட்சி கண்ணுகுடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் சமயபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை தஞ்சை மாவட்டம் வளப்பக்குடி கிராமம் அருகே நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கண்ணுகுடிப்பட்டி என்கிற ஒரே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி (60), ராணி (37), மோகனாம்பாள் (27), மீனா (26), தனலட்சுமி (36) ஆகிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இவர்களுடன் நடந்து சென்ற சங்கீதா படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்புச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் கண்ணுக்குடிப்பட்டி கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறி முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினர். நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.