தமிழகத்தில் தொடர்ச்சியாக வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 1ஆம் தேதி 90 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில், 'இன்று முதல் கடல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து டிசம்பர் 1ஆம் தேதி மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தை எட்டும்' தெற்கு மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதி, தென்மேற்கு,தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 40 லிருந்து 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதனால் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
நாளை தெற்கு மற்றும் வடக்கு அந்தமான் கடலை ஒட்டிய பகுதி, தென்கிழக்கு வங்கக்கடலில் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும், நவம்பர் 29 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 45லிருந்து 65 கிலோ மீட்டர் வேகம் சூறைக் காற்று வீசும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், திருச்சி, மதுரை, சென்னை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.