Skip to main content

10 நாட்களுக்கு கடைகள் மூடல்... வியாபாரிகள் முடிவு... அரசு மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு...

Published on 20/06/2020 | Edited on 20/06/2020

 

shops


திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாபார நிறுவனங்கள் தனிமனித இடைவெளிகளைக் கடைப்பிடிக்காததால் கரோனா பரவல் அதிகரித்தது. சாயர் மோட்டார் குரூப், சுமங்கலி நகைக்கடை, இரண்டு சூப்பர் மார்க்கெட்களில் பணியாற்றியவர்கள் மற்றும் அதன் உரிமையாளர் மற்றும் ஒரு கட்டடப் பொறியாளர் எனப் பலருக்கும் கரோனா வந்துள்ளது.

 

திருவண்ணாமலை நகரில் உள்ள 39 வார்டுகளில் சுமார் 60 கரோனா நோயாளிகள் உள்ளனர். இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவால் 5 பேர் பலியாகியுள்ளனர். இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியாகியுள்ளனர். இதனால் திருவண்ணாமலை தாலுக்கா வியாபாரிகள் சங்கம், தனது பொதுக்குழுவைக் கூட்டி வரும் ஜீன் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தன்னிச்சையாகக் கடைகளை மூடுவது என அறிவித்துள்ளனர். இதற்காக அறிவிப்பை தாலுக்கா வர்த்தகர்கள் சங்க தலைவர் தனகோட்டி என்பவர் செய்தியாளர்களை ஜீன் 17ஆம்  தேதி சந்தித்து அறிவித்தார்.

 

இதேபோல் செய்யார், வந்தவாசி, சேத்பட் தாலுக்கா வியாபாரிகள் சங்கமும் அறிவித்துள்ளது. இந்தக் கடைகள் மூடல் என்பது ஜீன் 16ஆம் தேதி முதல் என முன்பு அறிவித்தனர், பின்பு தேதி மாற்றி 17 என்றனர், பின்னர் 19 என்றனர், தற்போது 20ஆம் தேதியில் இருந்து என அறிவித்துள்ளனர்.

 

இப்படி தேதி மாறி மாறி அறிவித்தது குறித்து விசாரித்தபோது, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வியாபார சங்க நிர்வாகிகளை மிரட்டினர். நீங்கள் கடையடைப்பு செய்வதை அரசாங்கம் விரும்பவில்லை, கடையை அடைக்ககூடாது என மிரட்டினர். அந்த மிரட்டலால் கடைகளை அடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கடைகளை அடைத்தால் கரோனா பரவுகிறது என்கிற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மையாகிவிடும். அதனால் கடைகளை அடைக்க அனுமதிக்காதீர்கள் என அரசு உத்தரவிட்டதால், மாவட்ட நிர்வாகம் அதனை வியாபார சங்கத்தை எச்சரித்தது.

 

அந்த எச்சரிக்கையை ஏற்பதா, வேண்டாமா என்கிற சர்ச்சை எழுந்தது. அரசை விட உயிர்தான் முக்கியமென வியாபாரிகள் முடிவெடுத்தே கடையடைப்புக்கு அறிவிப்பு செய்தனர் என்கின்றனர் வியாபாரிகள் தரப்பிலேயே.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.

Next Story

“மோடிக்கு அந்தப் பாடத்தை வட இந்திய மக்களும் கொடுப்பார்கள்” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai says People of North India have also realized it

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

நாடாளுமன்ற கடைசி கூட்டத்தொடரின் போது பா.ஜ.கவும், பா.ஜ.க கூட்டணிக் கட்சியும் 370 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி உரையாற்றினாரே?

“அவருக்கு எதிர்க்கட்சி மாடம் கிடைக்கிறதா என்று பார்க்க சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர்கள் செய்த ஊழல்களை பற்றியெல்லாம் தென்னிந்திய மக்களுக்கு ஏற்கெனவே தெரியும். வட இந்திய மக்கள் கொஞ்சம் தெரியாமல் இருந்தார்கள். இப்பொழுது, வட இந்திய மக்களும் அதை உணர ஆரம்பித்து விட்டார்கள். இந்தத் தேர்தலில் மோடிக்கு அந்தப் பாடத்தை வட இந்திய மக்களும் கொடுப்பார்கள். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள், தங்களுடைய தொகுதி குறித்த கோரிக்கைகள் எதையுமே அவர்கள் காது கொடுத்து கேட்பதில்லை. மற்ற எம்.பிக்கள் பேசுவதை மட்டும் காது கொடுத்து கேட்காத இந்தச் செவிட்டு அரசு, மோடி பேசுவது மட்டும் நாங்கள் கேட்டுக் கொண்டு வர வேண்டுமா? நாங்கள் அப்பொழுது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அவர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்தார்கள்”.

தென்னிந்தியாவில் பா.ஜ.க வளர்ந்து கொண்டிருக்கிறது என்றும் தமிழகத்திற்கு வரும்போது வரவேற்பு அதிகமாக கிடைக்கிறது என்று பிரதமர் மோடி கூறுகிறாரே?

“நோட்டா கூட போட்டி போட முடியாத சூழல்தான் கடந்த தேர்தலில் நடந்தது. இப்பொழுது நோட்டா அளவுக்கு வரலாம். இன்னும் சில நாட்களில் தேர்தல் வரப்போகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது அதைப் பற்றி நீங்களே தெரிந்து கொள்வீர்கள். இந்தத் தொகுதியில் நிற்கக்கூடிய பாஜக வேட்பாளர் கூட இந்த ஊரைச் சேர்ந்தவர் அல்ல. அவர் சென்னையில் இருந்து வந்திருக்கிறார். இங்கே பா.ஜ.க வலுவாக இருக்கிறது என்றால் இங்கே இருக்கக்கூடிய பா.ஜ.க வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டியதுதானே. சென்னையிலிருந்து வேட்பாளரை கூட்டிக்கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?”

திருவண்ணாமலையில் ஏசி தரத்துடன் இருக்கின்ற பொது நூலகத்தைப் போல இளைஞர்களுக்கு வேறு என்ன ஏற்பாடு செய்ய திட்டமிட்டு இருக்கிறீர்கள்?

“நூலகங்களை விரிவுபடுத்தி ஒவ்வொரு தொகுதிக்கும் நூலகம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அந்த நூலகத்தில் மக்கள் பயன் பெறுகின்ற, மாணவர்கள் பயன்பெறுகின்ற புத்தகங்கள் வைக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். ஏனென்றால் மாநில அளவிலும், தேசிய அளவிலும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களைத் தயார்ப் படுத்தும் நோக்கத்துடன் அதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்.  அது சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது இந்தத் திட்டம் தொடரும்”.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. தொழிற்சாலைகள் அமைக்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? இந்த மாதிரி கோரிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கிறீர்களா?

“நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய 507 கேள்விகளில் ஒன்றிய அரசின் கீழ் எத்தனை துறைகள் இருக்கிறதோ, அந்தத் துறைகள் அடிப்படையில் நான் கேள்வி கேட்டிருக்கிறேன். ஆனால், அவர்கள் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை.  மாநில அரசு திட்டத்தின் மூலமாக, இந்தத் திருவண்ணாமலையில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் கூறியிருக்கிறார்”.

அண்ணாமலையார் கோவிலை மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்களே?

“திருப்பதிக்கு இணையாக திருவண்ணாமலை கோவிலுக்கு சிமெண்ட் சாலைகளை அமைச்சர் போட்டிருக்கிறார். இன்றைக்கு இந்தத் திருவண்ணாமலையை மாநகராட்சியாக, தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். மொத்தமாக் திருவண்ணாமலை நகருக்கு அடிப்படை வசதிகளை அமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். அதேபோல், கார்த்திகை தீப நாளில் 45 லட்சம் மக்கள் எதிர்கொள்ளும் அளவிற்கு பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை அமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். அதில் நாடாளுமன்ற உறுப்பினரின் பங்களிப்பாக அந்தந்த நிதிகளை பயன்படுத்தி என்னென்ன பணிகள் செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம்”.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, இதுவரை கலந்து கொண்ட கூட்டத்தில் தமிழக முதலமைச்சர், அமைச்சர் உதயநிதியும் இதுவரைக்கும் விவசாயி குறித்துப் பேசவே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே?

“விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறி, நமது முதலமைச்சர்தான் தள்ளுபடி செய்தார். இந்தியாவிலேயே விவசாயிகள் கடனை முதன் முறையாக தள்ளுபடி செய்தது டாக்டர் கலைஞர்தான். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது கலைஞர்தான். அவர் வழியில் நமது முதலமைச்சர், விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருக்கிறார். இந்த இரண்டரை வருஷத்தில் 2 லட்சம் மின்சாரத்தைக் கொடுத்திருக்கிறார்.

இப்போது, தேர்தல் அறிக்கையில் விவசாய கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று சொல்லி இருக்கிறார். இதைவிட விவசாயிகளைப் பற்றி யார் அதிகமாக பேசுவது?. மோடி ஆட்சியில் விவசாயிகளைப் பற்றி பேசி இருக்கிறார்களா? அல்லது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் விவசாயிகளைப் பற்றி பேசி இருக்கிறார்களா? விவசாய கடன் தள்ளுபடி பற்றி மோடியும், எடப்பாடி பழனிசாமி பேசவில்லை. ஆனால் தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்காகவே தனிப்பட்ட தனி பட்ஜெட்டை போட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொண்டிருக்கிறார்” எனக் கூறினார்.