
புதுக்கோட்டை மச்சுவாடி அரசு முன்மாதிரிப் பள்ளி மாணவர் மாதேஷ்வரனை முடிவெட்டி வரச் சொல்லி வீட்டிற்கு அனுப்பிய நிலையில், மாணவர் வீட்டிற்குச் செல்லவில்லை என்று தேடிய போது பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து உறவினர்களும், சக மாணவர்களும் ‘மாணவனை திருப்பி அனுப்பியதை பெற்றோரிடம் சொல்லி இருந்தால் மாணவன் உயிரை காப்பாற்றி இருக்கலாம்’ என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பள்ளிக் கல்வித்துறையின் ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை மாணவரிடம் சொன்னதால் தான் மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது வேதனை அளிக்கிறது. மாணவரை இழந்து வாடும் குடும்பத்தினரின் துயரம் மிகப் பெரியது. ஆனால் அதற்கு சம்மந்தமில்லாத தலைமை ஆசிரியர் மீதான நடவடிக்கை ஏற்கத்தக்கதில்லை என்று பல்வேறு ஆசிரியர் சங்கங்களும், அமைப்புகளும் கூறி வரும் நிலையில், நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நடவடிக்கையை நிறுத்தக் கோரி மனுவும் கொடுத்தனர். அதே போல நேற்று மாலை புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களில் சமூக கலாச்சார சீரழிவுக்கு உட்பட்டிருக்கும் மாணவர்களை நெறிப்படுத்துவதற்கு தமிழக அரசும் பள்ளிக் கல்வித்துறையும், இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமரசமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, மாணவர்கள் சில தகாத எதிர்வினைகளில் ஈடுபடுகிறார்கள்.

மாணவர்களை நல்வழிப்படுத்தும் நிகழ்வுகளில், எதிர்பாராத நிலையில் மனவெழுச்சியின் காரணமாக மாணவர்கள் தம்மை தவறான செய்கைக்கு உட்படுத்திக்கொள்ளும் நிலையில், ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை என்பது இயல்பானதாகிவிட்டது, இச்செயல் கற்பித்தல் பணியோடு மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த நெறிப்படுத்துதலை செய்யும் ஆசிரியர்களுக்கு இது தேவையற்ற செயல் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. எனவே வருங்கால சமூகத்திற்கு நல்ல குடிமகன்களை உருவாக்கும் ஆசிாியர்களின் செயலுக்கு இடையூறு ஏற்படா வண்ணம், இனி வருங்காலத்தில் ஒழுங்கு நடவடிக்கைகளை முறைமைப்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
புதுக்கோட்டை மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி, மேல்நிலை வகுப்பு மாணவன் சந்தேக மரணமடைந்ததைத் தொடர்ந்து புற அழுத்தத்தின் காரணமாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள தலைமையாசிரியர் சிவப்பிரகாசம் அவர்களின் தற்காலிக பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பள்ளிகளில் சமூக விரோதிகளால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கி பள்ளிகளில் அத்துமீறும் சமூக விரோதிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்து கற்பித்தல் பணி சுதந்திரமாக மேற்கொள்ள ஆசிாியர்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பை வழங்கிட அரசை கேட்டுக்கொள்கிறோம்.
மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகளை முறைப்படுத்திட ஆசிரியர், பெற்றோர், காவல்துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்பில் கண்காணிப்புக்குழு ஏற்படுத்தி பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் என அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் இல்லாததால் அவரது நேர்முக உதவியாளரிடம் மனுவை கொடுத்துள்ளனர்.