/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2680.jpg)
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இலங்கை தமிழர்கள் பலர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பாஸ்போர்ட் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் பலர், 3 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில் தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்து சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இதில் இலங்கை தமிழர்கள் 20 பேர் கடந்த 24-ந்தேதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் உமா ரமணன் என்பவர் டர்பைன்ட் எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். மற்ற 19 பேர் தூக்க மாத்திரையை உட்கொண்டு மயங்கி விழுந்தனர். இவர்கள் அனைவரும் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அவர்கள் சிகிச்சை பெற மறுத்தும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மேலும் தூக்க மாத்திரையை உட்கொண்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இலங்கை தமிழர்களில் ஒருவரான கெட்டியான் பாண்டி(வயது 42) மீது திருச்சி, மதுரை, கோவை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கெட்டியான் பாண்டிக்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் மற்ற இலங்கை தமிழர்களுக்கும் இடையே திடீரென நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. இதில் கெட்டியான் பாண்டி, மருத்துவமனையில் இருக்கும் கண்ணாடி ஜன்னலில் மோதியதாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஜன்னலில் இருந்த உடைந்த கண்ணாடியை எடுத்து மற்றவர்களை அவர் தாக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அங்கு வந்த துணை காவல் ஆணையர் ஸ்ரீதேவி, உதவி காவல் ஆணையர் பாஸ்கர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த இலங்கைத் தமிழர்களில் 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)