/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/magadevan.jpg)
சிலை கடத்தல் தொடர்பாக 2017 ஜுலைக்கு பிறகு தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் விசாரிக்க நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையில் சிறப்பு அமர்வை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள உற்சவர் சிலை மற்றும் மூலவர் சிலைகள் சேதம் அடைந்துள்ளது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையில் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் ஆஜராகி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்கள் களவு போயிருப்பதாகவும், கோயிலில் உள்ள பலங்கால கதவுகள் மற்றும் பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், அதைபோல் கோயில் உள்ள உற்சவர் மற்றும் மூலவர் சிலைகளை மாற்றி போலியான சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
அதே போல கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதியிலிருந்து 3 நாட்களுக்கு பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்க படவில்லை என்றும், இதற்கு முறையான விளக்கத்தை கோயில் நிர்வாகம் அளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.
கோவிலின் தரப்பில் அறநிலையத்துறை இணை ஆணையர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ் பராசரன், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானது, இதுதொடர்பாக ஏற்கனவே காவல்துறை விசாரணை மேற்கொண்டு இந்த புகாரில் உண்மைத்தன்மை இல்லையென புகாரை முடித்து வைத்துள்ளதாகவும், தினமும் செய்திகளில் வரவேண்டும் என்பதற்காக இதுபோல செயல் படுவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையில் நீதிபதி மகாதேவன் குறுக்கிட்டு, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வை ஏற்படுத்தி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளதாகவும், அதனபடி தானும், ஆதிகேசவலு-வும் இணைந்து இந்த வழக்குகளை ஜூலை 25ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.
அதன்படி, சிலை கடத்தல் தொடர்பாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவை அமைத்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25 வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவு பிறப்பித்த பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகள் சிறப்பு அமர்வில் பட்டியலிடப்படும் என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)