Skip to main content

அனைத்து நீதிமன்றங்களுக்கும் வாரத்தில் ஆறு வேலை நாட்கள்! -சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

high court chennai


சென்னை உயர் நீதிமன்றத்துக்கும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும், வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்கள் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 


கரோனா தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக குறைந்த அளவில் ஊழியர்களைக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றமும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. இதனால், பணிச்சுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாள் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் தவிர்த்து, மற்ற அனைத்து சனிக்கிழமைகளிலும், சென்னை உயர் நீதிமன்றமும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” - உயர்நீதிமன்றம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ban on using OPS aiadmk symbol will continue says Madras High Court

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்,  அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

அனல் பறக்கும் தேர்தல் களம்; தி.மு.க.வில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Important announcements in DMK for lok sabha election

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

Important announcements in DMK for lok sabha election

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் மீண்டும் கே. சுப்பராயன் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜ் போட்டியிட உள்ளார். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, பொள்ளாச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, பெரம்பலூர், கோவை, ஈரோடு, தென்காசி, தேனி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை நாளை (20.03.2024) காலை 10.00 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிடப்படுகிறது. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மாநிலம் முழுவதும் பயணித்து மக்களை நேரில் சந்தித்து, கருத்துக்களைக் கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தின் 21 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் நாளை காலை வெளியிடப்படவுள்ளது. இதனையடுத்து திருச்சியில் வரும் 22 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்க உள்ளார். அதற்கு மறுநாளான 23 ஆம் தேதி திருவாரூரில் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார்.