Skip to main content

இரிடியம் மோசடியில் ஈடுபட்ட ஆறு பேர் கைது!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

Six arrested for iridium scam

 

கோவையில் உள்ள  ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் உள்ளதாக கூறி ஒரு கும்பல், கேரளாவைச் சேர்ந்த நபர்களிடம் சோதனை செய்து காட்டிவருவதாக செட்டிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், வீட்டில் சோதனையிட்டபோது அங்கு கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள், கவச உடை, ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த 8 பேரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

 

அப்போது இரிடியம் ரைஸ் புல்லிங் விற்பனை மோசடிக்கு கூடியிருந்ததும் தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ்குமார், சூரியகுமார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த போஜராஜ், கோவையைச் சேர்ந்த முருகேசன், செந்தில்குமார்,  வெங்கடேஷ் பிரபு ஆகியோர் பிடிபட்டனர். மேலும் இவர்கள், கேரளாவில் உள்ள ரைஸ் புல்லிங் மோசடி கும்பலைச் சேர்ந்த சாஜி என்பவருடன் சேர்ந்து பணத்தேவை மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக ரைஸ் புல்லிங் தேவைப்படுவோரை இடைத்தரர்கள் மூலம் தேர்ந்தெடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கேரளாவைச் சேர்ந்த மகரூப், அப்துல் கலாம் ஆகிய இரண்டு பேரை அணுகி தங்களிடம் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான இரிடியம் ரைஸ் புல்லிங் இருப்பதாக கூறிய இந்தக் கும்பல், பல தவணைகளாக ரூ. 27 லட்சம்வரை பணத்தைப் பறித்துள்ளனர்.

 

ஆனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க இந்தக் கும்பல் சோதனை செய்து காட்டியும் பணம் பறித்துவந்துள்ளனர். அதாவது, சாதாராண வெங்கல செம்பை பெட்டிக்குள் வைத்து, பெட்டிக்குள் மிளகாய் ஸ்பிரேவை அடித்து வைத்துக்கொண்டு, பின்னர் வாங்க வருவோரிடம் கவச உடைகளை அணிந்துகொண்டு வெளியே எடுக்கும்போது, அந்த இரிடியத்திற்கு எத்தனை சக்தி உள்ளது என்பதைப் பார்த்தீர்களா? எனச் சொல்லி  ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கும்பலைச் சேர்ந்த 6 பேரையும் பிடித்த போலீசார் அவர்களிடமிருந்து 99.20 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், இரண்டு கவச உடைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் 2 கார்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான கேரளாவைச் சேர்ந்த சாஜி என்பவரை இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.