In Sivagangai district Rs. 130 crore urban habitat development project

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம், கழனிவாசல் திட்டப்பகுதியில் ரூ.130.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 900 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான அடிக்கல் நாட்டுவிழாவை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக்காட்சி வாயிலாகத் துவக்கிவைத்தார்.

Advertisment

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (22.1.2022) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம், கழனிவாசல் திட்டப்பகுதியில் 130 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 900 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளுக்குக்காணொளிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

Advertisment

ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் வாழும் நகர எளிய குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கழனிவாசல் திட்டப்பகுதியில் உள்ள 11 ஏக்கர் நிலத்தில் 900 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. தரை மற்றும் மூன்று தளங்களுடன் ஒவ்வொரு குடியிருப்பும் 411 சதுர அடி கட்டுமானப் பரப்பில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை. கழிவறை ஆகியவற்றுடன் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான குடிநீர் வசதி, மின்சாரம் போன்ற வசதிகளுடனும் கட்டப்படும்.

இத்திட்டப்பகுதியில் சாலைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளைச் சுற்றி நடைபாதை, மழைநீர் வடிகால், மழைநீர் சேமிப்பு அமைப்பு, பூங்கா, தெரு மின்விளக்கு மற்றும் சுற்றுசுவர் போன்றவை அமைக்கப்படும். மேலும், இத்திட்டப் பகுதியில் நியாயவிலைக்கடை, சமுதாயக்கூடம், அங்கன்வாடி, சுகாதார நிலையம். வாழ்வாதார மையம், நூலகம், வாகனம் நிறுத்துமிடம், திறந்தவெளிச்சந்தை, உடற்பயிற்சி நிலையம், போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்படும். இக்குடியிருப்புகள் காரைக்குடி நகராட்சியில் நீர்நிலை அருகில் குடிசைப்பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், குறு, சிறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.