Skip to main content

சிவகங்கை சீமையை சிலிர்க்கவைத்த காங்கிரஸ் நிர்வாகி! மகன் திருமணத்தில் ருசிகரம்

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

sivaganga Congress executive daughter marriage function viral

 

"நானும் தொழிலாளியாக இருந்தவன் தான். அதோட அருமை எனக்கு தெரியும்" எனச் சொல்லியபடி, தனது மகனின் திருமணத்தில் வேலை செய்த அனைவருக்கும் சால்வை அணிவித்து கௌரவப்படுத்திய காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் செயல் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியான ரெட்ரோஸ் பழனிச்சாமி சிவகங்கையில் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். இவரது மகன் விஷ்ணுவர்தன் என்பவருக்கு சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் பெரியகருப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றாலும், மணமகனின் தந்தை ரெட்ரோஸ் பழனிச்சாமி செய்த செயல் அங்கிருந்தவர்கள் அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த திருமண விழாவிற்காக சமையல் செய்தவர்கள், ஒளிப்பதிவு செய்தவர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவரையும் மேடைக்கு வரவழைத்த ரெட்ரோஸ் பழனிச்சாமி, அவர்களுக்கு தனது கையால் சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார். இதனால் ஆச்சரியமடைந்த பணியாளர்கள், என்ன சொல்வது எனத் தெரியாமல் திகைத்து நின்றனர். அதில் சிலர் கண்ணீரும் சிந்தினர்.

 

இதுகுறித்து அங்கு வேலை செய்த பணியாளர்கள் கூறும்போது, “கல்யாண பத்திரிகைலயே எங்களோட பெயர போட்டிருந்தாங்க. அப்போவே எங்களுக்கு ஆச்சரியமா இருந்துச்சு. நாங்க எத்தனையோ கல்யாணத்துக்கு போயிருக்கோம். வேலை செஞ்சா பணம் கொடுப்பாங்க.. அவ்வளவுதான். ஆனா, இந்த மாதிரி யாரும் எங்கள கௌரவப்படுத்தல. எங்களுக்கு சந்தோஷமா இருக்கு” என நெகிழ்ச்சியோடு பேசியிருந்தார்.

 

பின்னர், இந்த கதையின் நாயகனான ரெட்ரோஸ் பழனிச்சாமி கூறும்போது, "நானும் தொழிலாளியா இருந்தவன் தான். அதோட அருமை எனக்கு தெரியும். என்னோட மகன் கல்யாணத்துல வேலை செஞ்சவங்கள கௌரவப்படுத்தணும்னு நெனச்சேன். அதுனால தான் அப்படி பண்ணேன்" எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.