




சமீப காலமாக சிங்கப்பூரில் வேலை செய்யும் தமிழக இளைஞர்களின் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நிறுவன முதலாளிகள், மேலாளர்கள் என அனைவரும் நேரில் வந்து வாழ்த்துவதும் அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு கணினி போன்ற தொழில்நுட்ப பொருட்களை வழங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஏதோ ஒரு அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தொழில்நுட்ப வசதியுடன் கல்வி கற்கின்றனர்.
கடந்த வாரம் தஞ்சை மாவட்டத்தில் ஒரு ஊழியரின் திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர் சிங்கப்பூர் தொழிலதிபர்கள். அதே போல், ஞாயிற்றுக் கிழமை புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கே.ஆர்.செல்வம் மற்றும் அவரது சகோதரரும் கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில், அவருக்கும் அவரது சகோதரர் சின்னதுரைக்கும் ஒரே நேரத்தில் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்காக விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர். திருமண அழைப்பிதழை சிங்கப்பூர் நண்பர்களுக்கு கொடுத்ததுடன் தனது நிறுவன உரிமையாளர் கால்லின், நிறுவன திட்ட இயக்குநர் ஹம்மிங்க், திட்ட மேலாளர் டிம் ஆகியோருக்கும் கொடுத்துள்ளனர்.
தனது நிறுவன ஊழியர் திருமண நாளில் கறம்பக்குடி வந்த சிங்கப்பூர் நிறுவன உரிமையாளர் மற்றும் திட்ட இயக்குநர், மேலாளர் ஆகியோரை திருமண மண்டபத்திற்கு கறம்பக்குடி சீனிகடை முக்கத்திலிருந்து பரிவட்டம் கட்டி குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்துச் சென்று பெண்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து வரவேற்றனர்.
விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனும் கலந்து கொள்ள இனிதே இரு திருமணங்களும் முடிந்த நிலையில், வெளிநாட்டினருக்கு அமைச்சர் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய போது 'ஐ லவ் இந்தியா' என்று தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இது போன்ற தமிழ்நாட்டின் கலாச்சாரம் பெருமையாக உள்ளதாக கூறினர்.
வெளிநாட்டு முதலாளி இவ்வளவு தூரம் வந்து ஒரு ஊழியரின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியதை அப்பகுதியினர் மகிழ்வோடு பேசி வருகின்றனர். தொடர்ந்து கருக்காக்குறிச்சி பகுதியில் உள்ள சில அரசுப் பள்ளிகளுக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்க உள்ளதாக கூறுகின்றனர்.