
நேற்று சென்னை அமைந்தகரையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, பாஜக தமிழ்நாட்டில் வளர திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று பேசியதாகச் சொல்லப்படுகிறது. அவர் தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
தனித்து நிற்பது தொடர்பான பேச்சுக்கு வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி, பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்திடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''யாருமே கட்சி ஆரம்பிப்பது அவர் அவர்களுடைய கட்சி வளர்ச்சிக்காகத் தான். ஒவ்வொருவருடைய நிலைப்பாடு ஒவ்வொரு மாதிரி இருக்கும். அவர் எந்த நோக்கத்திற்காக அப்படிச் சொன்னார் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். யாருமே இங்கு கட்சி ஆரம்பிப்பது எதற்காக என்றால் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான். அவருடைய கட்சியின் வளர்ச்சிக்கு அவர் சொல்லி இருக்கலாம். அந்த கருத்துக்கான விளக்கத்தை அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்'' என்றார்.
மேலும் பேசிய அவர், ''தமிழ்நாட்டில் தமிழ் பாடத்திற்கான தேர்வில் ஐம்பதாயிரம் பேர் ஆப்சன்ட் என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கான தலைகுனிவு. வரும் காலங்களில் அரசும், அமைச்சர்களும் அதை நிச்சயமாக ஆய்வு செய்து ஏன் வரவில்லை 50 ஆயிரம் மாணவர்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். நாட்டின் எதிர்காலமே மாணவர்கள் தான் எனவே நிச்சயமாக இனி வரும் காலங்களில் இப்படி இருக்கக் கூடாது'' என்றார்.