Skip to main content

நகைக்காக நடந்த கொலை: போலீஸ் விசாரணையில் வெளியான குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்!

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

Shocking confession released during police investigation

 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ளது துலுக்கா நத்தம் காலனி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் 55 வயது முத்தம்மாள். இவர் கூடையில் மீன் கருவாடு சுமந்து கொண்டு சென்று ஊர் ஊராகசென்று விற்பனை செய்து வருகிறார். கடந்த 11ஆம் தேதி மீன், கருவாடு விற்கச் சென்ற முத்தம்மாள் வீடு வந்து சேரவில்லை. இதுகுறித்து கண்டமங்கலம் காவல் நிலையத்தில் முத்தம்மாளின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி பாக்கம் கிராமத்தில் உள்ள ஒருகரும்பு வயலில் முத்தம்மாள் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப் இன்ஸ்பெக்டர் பிரபு, பிரேம் குமார், கணேசன், பிரகாஷ் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டார்.

 

அதன்படி தனிப்படை போலீசார் குற்றவாளியைத் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் பாக்கம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த 22 வயது விநாயகம் என்ற இளைஞர் கிராம நிர்வாக அலுவலர் பாலலட்சுமி முன்பு சரணடைந்து முத்தம்மாளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அதோடு போலீசாரிடம் விநாயகம் அளித்த வாக்குமூலத்தில், “விவசாய டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறேன். கரும்பு தோட்டத்திற்கு அருகில் உள்ள செங்கல் சூளையில் டிராக்டர் மூலம் லோடு ஓட்டிக் கொண்டிருந்தேன். கஞ்சா புகைக்கும் பழக்கம், ஆடம்பரமாக செலவு செய்யும் பழக்கம் காரணமாக எனக்கு கடன் அதிகமாக இருந்தது. கடனை அடைப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது முத்தம்மாள் கழுத்து நிறைய நகைகளுடன் ஊர் ஊராக கருவாடு விற்க செல்வது நினைவுக்கு வந்தது.

 

மேலும் எனக்கு முத்தம்மாளை நன்றாக தெரியும். அவர் பல முறை  கழுத்து நிறைய நகை அணிந்து கொண்டு வந்ததை பார்த்தேன். அவரிடமிருந்து நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டேன். ஏற்கனவே சிலமுறை வியாபாரம் முடிந்து திரும்பும் முத்தம்மாளை எனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அவரது ஊரில் விட்டுள்ளேன். எனவே அவரிடம் உள்ள நகைகளை பறிக்க முடிவு செய்தேன். அதன்படி கடந்த 11ஆம் தேதி அதிகாலை நிறைய மது குடித்தேன். இதனால் போதை தலைக்கேறியது பிற்பகல் 2 மணி அளவில் முத்தம்மாளை தேடி சென்று சந்தித்தேன். அவரிடம் நான் வேலை செய்யும் செங்கல் சூளையில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் மொத்தமாக கருவாடு வேண்டும் என்று கூறினேன். அவரும் அதை நம்பி அதிக அளவு கூடையில் கருவாடு  நிரப்பிக்கொண்டு என்னுடன் புறப்பட்டார். அப்படி அழைத்துச் செல்லும்போது குறுக்கு வழியாக சென்றால் செங்கல் சூளைக்கு சீக்கிரம் செல்லலாம் என்று கூறி அவரை கரும்புத் தோட்டத்தின் வழியாக அழைத்துச் சென்றேன்.

 

அப்படி செல்லும்போது கரும்பு தோட்டத்தில் யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு முத்தம்மாள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கொத்தாகப் பிடித்து இழுத்தேன். அவர் கத்தி கூச்சல் போட்டார் அவரது சேலை முந்தானையால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் அவர் அணிந்த நகைகள், கொலுசு மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் தப்பினேன். அதில் சில நகைகள் எங்கள் வீட்டில் பதுக்கி வைத்தேன். கொலை செய்த பயம் காரணமாக அதிக அளவில் குடித்தேன். இருப்பினும் அவரை கொலை செய்த பயம் அதிகரித்தது. எங்கள் தெருவில் உள்ள எனது நண்பர் சதீஷ்குமாரை சந்தித்து நடந்த சம்பவத்தைக் கூறினேன். மீதம் இருந்த நகைகளை அவரிடம் கொடுத்து எனக்கு உதவி செய்யுமாறு கேட்டேன்.

 

அவரும் உதவுவதாக கூறினார். அதன்பிறகு மூதாட்டி உடல் அழுகி துர்நாற்றம் வீசினால் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்பதால் அந்த உடல் மீது இரசாயனத் கரைசலை ஊற்றினேன். அதனால் 15 நாட்கள் கடந்தும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. இனிமேல் தப்பிவிடலாம் என எண்ணினேன் ஆனாலும் போலீசார் என்னை நெருங்கவே கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தேன்”. இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது கூட்டாளி சதீஷ் குமார் என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து வெள்ளி கொலுசுகள் நகை பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நகை பணத்திற்கு ஆசைப்பட்டு இரண்டு இளைஞர்கள் செய்த கொடூர சம்பவம் கண்டமங்கலம் பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் டூ ஏற்காடு; கொல்லப்பட்ட பெண் - உறைய வைக்கும் பின்னணி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Two youths were arrested in the case of the passed away of the young woman

சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் 40 அடி பாலம் அருகே மார்ச் 20 ஆம் தேதி, கடும் துர்நாற்றம் வீசுவதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. வனக்காவலர் பெருமாள் அங்கே சென்று பார்த்தபோது, வனப் பகுதிக்குள் 20 அடி பள்ளத்தில் ஒரு சூட்கேஸ் பெட்டி கிடப்பதும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதும் தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் ஏற்காடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். அதன்பேரில், ஆய்வாளர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். ஈக்களும் புழுக்களும் மொய்த்துக் கொண்டிருந்த அந்த மர்ம சூட்கேஸை கைப்பற்றினர். அதைத் திறந்து பார்த்தபோது, அந்த பெட்டிக்குள் அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் இருந்தது தெரிய வந்தது. கொலையுண்ட பெண் சுடிதார் டாப்ஸ் மற்றும் பேண்ட் ஆகிய உடைகளை அணிந்திருந்தார்.

தடயவியல் நிபுணர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று தடயங்களைச் சேகரித்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சடலத்தை கூராய்வு செய்தனர். மர்ம நபர்கள் இளம்பெண்ணை கொலை செய்து, சூட்கேஸ் பெட்டிக்குள் அடைத்து, நீண்ட நாள்களுக்கு முன்பே இந்தப் பகுதியில் வீசியிருக்க வேண்டும் என்பதால், சடலம் முற்றிலும் சிதிலம் அடைந்து இருந்தது. அதனால் சடலமாகக் கிடப்பது யார் என்று உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

தகவல் அறிந்த மாவட்டக் காவல்துறை எஸ்.பி., அருண் கபிலன், சேலம் புறநகர் டி.எஸ்.பி. அமலா அட்வின் நிகழ்விடம் விரைந்தனர். கொலையுண்ட நபர் யார் என்று தெரிந்துவிட்டால், கொலையாளியை எளிதில் நெருங்கி விட முடியும் என்பதால், முதலில் சடலமாகக் கிடந்த இளம்பெண் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினரை முடுக்கிவிட்டார் எஸ்.பி., சடலம் கிடந்த சூட்கேஸ் பெட்டி புதியதாகவும், பெரியதாகவும் இருந்தது. அந்தப் பெட்டியை விற்பனை செய்த கடையின் ஸ்டிக்கர் இருப்பது தெரிய வந்தது. அதை வைத்து விசாரித்தபோது, கோவையில் உள்ள லூலூ மால் வணிக வளாகத்தில் உள்ள டிராவல்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் கடையிலிருந்து வாலிபர் ஒருவர் அந்தப் பெட்டியை வாங்கிச் சென்றது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் விசாரித்தபோது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவக்கோட்டையைச் சேர்ந்த நடராஜ்(32) என்பவர்தான் அந்தப் பெட்டியை வாங்கிச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, இளம்பெண் கொலை வழக்கில் மர்ம முடிச்சுகள் அடுத்தடுத்து அவிழத் தொடங்கின. நடராஜை  கைது செய்து காவல்துறையினர், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் சினிமாவை விஞ்சும் திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.  சூட்கேஸ் பெட்டிக்குள் சடலமாகக் கிடந்தது, தேனி மாவட்டம் முத்துலாபுரத்தைச் சேர்ந்த சுபலட்சுமி (33) என்பதும், அவரைத் தான்தான் கொலை செய்து பெட்டியில் அடைத்து, ஏற்காடு மலைப் பகுதியில் வீசிச் சென்றேன் என்றும் ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டார் நடராஜ்.

கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தோம்.  பொறியியல் பட்டயப் படிப்பு முடித்துள்ள நடராஜ், பிரான்ஸ் நாட்டில் வேலை செய்து வந்தார். வெளிநாடுகளுக்கு பட்டதாரி இளைஞர்களை வேலைக்கு அனுப்பி வைக்கும் கன்சல்டன்சி நிறுவனமும் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு பெண் குழந்தைகளும் பரவக்கோட்டையில் வசிக்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பிரான்சில் வேலை செய்து வந்தபோது, மேட்ரிமோனி இணையதளத்தில் தனக்கு இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேவை என புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார். அப்போது கத்தார் நாட்டில் உள்ள ஒரு கணினி நிறுவனத்தில் வேலை செய்து வந்த, சுபலட்சுமியும் தன்னுடைய இரண்டாம் திருமணத்திற்கு மணமகன் தேவை என்றும், கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும், நடராஜ் பதிவு செய்திருந்த அதே மேட்ரிமோனி இணையதளத்தில் தனது புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணுடன் விவரங்களை பதிவு செய்திருந்தார்.

Two youths were arrested in the case of the passed away of the young woman

மேட்ரிமோனி இணையதளத்தின் மூலம் அறிமுகமாகிக் கொண்ட இருவரும், தினமும் செல்போன் மூலம் பேசி நட்பை வளர்த்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் அவர்களின் நட்பு எல்லை தாண்டி, திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இந்தியா திரும்பியதும் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தவும் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர்கள் இந்தியா திரும்பினர். இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்று சில நாள்கள் தங்கியிருந்து விட்டு, மீண்டும் வெளிநாட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பி விட்டனர். ஆனால் அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லாமல் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி, கோவை பீளமேட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

சுபலட்சுமி மீது காதல் வயப்பட்டு இருந்த நடராஜ், அவருடைய பெயரை தனது கையில் டாட்டூவாக குத்தி இருந்தார். இதற்கிடையே, கடந்த ஜனவரி 1ம் தேதி பரவக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று மனைவி, குழந்தைகளைப் பார்த்துவிட்டு மீண்டும் கோவை திரும்பினார் நடராஜ். கோவைக்கு வந்த நடராஜிடம், அவர் கையில் தனது பெயரின் டாட்டூ அழிக்கப்பட்டு இருந்தது குறித்து சுபலட்சுமி கேள்வி எழுப்பினார். பரவக்கோட்டையில் உள்ள தனது மனைவி, குழந்தைகளைப் பார்க்கச் சென்றதாகவும், அதனால் டாட்டூவை அழித்துவிட்டதாகவும் கூறியுள்ளார் நடராஜ். இதனால் ஜன. 1ம் தேதி இரவு அவர்களுக்குள் விடிய விடிய கடும் வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டுள்ளது.

குடிபோதையில் இருந்த நடராஜ், ஆத்திரத்தில் சுபலட்சுமியைப் பிடித்து இழுத்து அவருடைய தலையை சுவரில் மோதியுள்ளார். வீட்டில் இருந்த கட்டையாலும் அவருடைய தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சுபலட்சுமி, நிகழ்விடத்திலேயே பலியானார். அவர் இறந்துவிட்டதை அறிந்த நடராஜ், பதற்றம் அடைந்துள்ளார். இதையடுத்து அவர், பரவக்கோட்டையில் உள்ள தனது உறவுக்கார நண்பன் கனிவளவனை தொடர்பு கொண்டு, நடந்த சம்பவம் குறித்து கூறி உதவிக்கு அழைத்துள்ளார்.

காவல்துறையில் சிக்காமல் இருக்க, பெண்ணின் சடலத்தை மறைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள், கோவையில் உள்ள லூலூ மால் வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பெரிய அளவில் ஒரு டிராலி சூட்கேஸ் பெட்டியை வாங்கினர். அந்த பெட்டியில் சுபலட்சுமியின் சடலத்தை திணித்தனர். பிறகு ஒரு காரை வாடகைக்கு எடுத்த அவர்கள், அதில் சடலத்துடன் கூடிய பெட்டியை வைத்துக் கொண்டு, அவர்களே ஏற்காட்டிற்கு ஓட்டிச் சென்றுள்ளனர். இரவு நேரத்தில் காரை ஓட்டிச் சென்ற அவர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத 40 அடி பாலம் அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் சடலத்துடன் கூடிய சூட்கேஸ் பெட்டியை தூக்கி வீசியுள்ளனர்.

பின்னர் மலையேறிய அவர்கள், அங்கிருந்து குப்பனூர் வழியாக இரவோடு இரவாக காரில் தப்பிச் சென்றுவிட்டனர். இரண்டரை மாதங்களாகியும் இந்த சம்பவம் குறித்து வெளியே செய்திகள் ஏதும் பரவாத நிலையில், இனியும் தங்களுக்கு சிக்கல் ஏதும் வராது என்று நடராஜ் கருதினார். இதனால் அவர் மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்குச் செல்லத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். இந்நிலையில், சூட்கேஸ் பெட்டியில் இருந்த சின்ன தடயத்தால் காவல்துறை பிடியில் சிக்கிக் கொண்டார்.

இதற்கிடையே, சடலத்தை வீசிய நாளிலிருந்து நடராஜ் ஒரே இடத்தில் வசிக்காமல், கோவை, சென்னை, பரவக்கோட்டை என அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்துள்ளார். மார்ச் 20ம் தேதி, சடலம் கைப்பற்றப்பட்ட தகவல் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து, அவர் பிரான்ஸூக்குச் சென்று தலைமறைவாகி விடலாம் என்றும் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளையும் விரைவாகச் செய்து வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

சடலத்தை மறைக்கத் திட்டமிட்ட அவர்கள், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைப் பகுதியில் வீசிவிடலாம் எனக் கருதி அங்கு சென்றுள்ளனர். பின்னர் கள்ளக்குறிச்சி சேர்வராயன் மலைப் பகுதிக்கு வந்த அவர்கள், கடைசியாக ஏற்காடு மலையைத் தேர்வு செய்து, சடலத்தை வீசிச் சென்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நடராஜ், அவருடைய நண்பர் கனிவளவன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், ஏற்காடு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மார்ச் 24 ஆம் தேதி ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சடலம் கைப்பற்றப்பட்ட ஐந்தே நாள்களில், கொலையுண்ட பெண் யார் என்பதைக் கண்டறிந்து, கொலையாளிகளையும் கைது செய்த டிஎஸ்பி அமலா அட்வின், காவல் ஆய்வாளர்கள் செந்தில்ராஜ் மோகன், நாகராஜ், ஸ்ரீராம் தலைமையிலான தனிப்படையினரை சேலம் சரக டிஐஜி உமா, மாவட்ட எஸ்பி அருண் கபிலன் ஆகியோர் பாராட்டினர். 

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார்.