/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bnmnmnm_66.jpg)
தற்கொலை செய்ததாககூறப்படும்,செய்யூர் சசிகலா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்காணிப்பில் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த நைனார் குப்பத்தைசேர்ந்த சசிகலா என்ற 24 வயது இளம்பெண் ஜூன் 24-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அப்பகுதியைசேர்ந்த திமுக நிர்வாகி தேவேந்திரன் அளித்த தகவலின் அடிப்படையில், செய்யூர் காவல் நிலையத்தினர் உடலைக் கைப்பற்றினர்.
பிரேத பரிசோதனை மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் முடிந்து, சசிகாலாவின் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நிலையில், தனது தங்கையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக, சசிகலாவின் சகோதரர் அருண்பாபு புகார் அளித்தார். அதில், தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருஷோத்தமன் ஆகிய இருவரும்தான், தங்கையைக் கொலை செய்துவிட்டு நாடகமாடியதாககுற்றம் சாட்டியிருந்தார்.
தங்கை சசிகலா குளிக்கும்போதுவீடியோ எடுத்துவைத்து, அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி, இருவரும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக, சசிகலாவின் தோழிகள் அளித்த தகவலின் அடிப்படையில்,உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக தேவேந்திரன், புருஷோத்தமன் ஆகியோர் திமுக-வில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர், புருஷோத்தமன் கைது செய்யப்பட்ட நிலையில், தேவேந்திரன் சரணடைந்தார். இந்நிலையில், மகள் சசிகலாவின் மரணம் குறித்து, செய்யூர் காவல் நிலையம் விசாரித்துவரும் வழக்கை,சிபிசிஐடி அல்லது சிபிஐவிசாரிக்க உத்தரவிடக்கோரி, அவரது தயார் கே.சந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவரது மனுவில், சசிகலா மரணம் தொடர்பான வழக்கில்,தற்கொலைக்கு தூண்டியதாக மட்டுமே புருஷோத்தமன் மற்றும் தேவேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு செய்யூர் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர்.விசாரணை முறையாக நடைபெறவில்லை. இருவர் மீதும்,தன் மகளை நிர்வாண வீடியோ எடுத்தது, பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்தது, மரணம் விளைவித்தது போன்ற பிரிவுகளிலோ, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றதடுப்பு சட்டத்திலோ வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை நடத்துவது, இருவரையும் வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கும் காவல்துறையின் முயற்சி ஆகும். இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கும் போதிய முகாந்திரம் இருப்பதாக, மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், தொடக்கத்தில் இந்த வழக்கு தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர், தற்கொலைக்கு தூண்டியதாக புருஷோத்தமன் மற்றும் தேவேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து, தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு, தற்கொலை செய்து கொண்ட சசிகலாவின் உறவினர்கள் சிலர் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்த நீதிபதி, சசிகலாவின் உறவினர்களான சுமன், அரவிந்த் மற்றும் சுரேஷ் ஆகியோர், செய்யூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், செய்யூர் காவல் நிலையம் தொடர்ந்து விசாரணையை மேற்கொள்ள அனுமதியளித்த நீதிபதி, சாட்சிகள், ஆவணங்கள் அடிப்படையில் விசாரணையை நடத்தி 12 வாரத்தில் இறுதி விசாரணை அறிக்கையை காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இந்த வழக்கின் முழு விசாரணையும், செங்கல்பட்டு மாவட்ட எஸ். பி. கண்காணிப்பில் நடத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)