Skip to main content

இரண்டு நாட்கள் அடைத்துவைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை... சென்னையில் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும், கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அண்மையில் ஆவடியில் 4 வயது சிறுமி சொந்தக்காரர் போல பழகிய பக்கத்து வீட்டில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு குளியலறையில் உள்ள பக்கெட்டில் திணிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

sexual abuse


இந்த சம்பவத்திற்கு முன் அதேபோல் சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் அதே குடியிருப்பில் வேலை செய்யும் செக்யூரிட்டிகள், லிப்ட் ஆபரேட்டர்கள் என பதிமூன்று பேரால் பல நாட்களாக தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இப்படி நாளுக்குநாள் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொடுமைகள் அரங்கேறிவரும் நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் பாட்டியுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்த 15 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் இரண்டு நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரில் மூன்று பெண்களை  கைது செய்த காவல்துறை சிறுமியை வன்கொடுமை செய்த புகாரில் அந்த ஐந்து பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

sexual abuse


பள்ளிப்படிப்பை ஒன்பதாம் வகுப்புடன் நிறுத்திவிட்டு தாய், பாட்டி, சகோதரன், சகோதரி என குடும்பத்தாருடன் சென்னை புரசைவாக்கத்தில வசித்து வந்துள்ளார் அந்த சிறுமி. ஜூலை 3ஆம் தேதி வீட்டில் சிறுமியும் பாட்டியும் மட்டுமே இருந்த போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. பாட்டியுடன் கோபித்துக் கொண்ட அந்த 15 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார். தாய் மற்றும் உடன் பிறந்தவர்களிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் காணாமல்போன சிறுமியை தேடி அலைந்தவர்கள் இறுதியில் புளியந்தோப்பு சரகம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

police


காவல்துறையினரும் சிறுமியை தேடியும் சிறுமி மீட்கப்படவில்லை. இந்நிலையில் என்ன செய்வதென்று குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருந்த பொழுது ஜூலை 9ம் தேதி ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தார் அந்த சிறுமி. கோபத்தில் போனவர் மனம் மாறி வந்து விட்டார் என அவரது குடும்பம் மகிழ்ச்சி அடைந்தது. சிறுமி மீண்டும் கிடைத்துவிட்டதாக காவல்துறையிடம் தெரிவிக்க அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு குடும்பத்தினர் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு சென்றனர்.

காவல் நிலையத்தில் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. வீட்டை விட்டு வெளியேறிய நேரத்திலிருந்து வீடு திரும்பும் வரை என்ன நடந்தது என அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குடும்பத்தினரிடம் இதுபற்றி எதுவும் வாய் திறக்காத சிறுமி போலீசாரின் விசாரணையில் உண்மைகள் அனைத்தையும் தெரிவித்தார். வீட்டை விட்டு வெளியேறிய அந்த சிறுமி ஏற்கனவே அறிமுகமான வியாசர்பாடியைச் சேர்ந்த ஜெபினா என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரும் அடைக்கலம் தருவதாக வீட்டில் சேர்த்துக் கொண்டுள்ளார். தன்னுடன் தங்கியிருந்த சிறுமியை முபீனா பேகம் என்பவருடன் சேர்ந்து நிஷா என்பவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் ஜெபினா.

sexual Torture to 15-year-old girl in Chennai


புரசைவாக்கத்தை சேர்ந்த நிஷா பாலியல் தொழில் செய்பவர் எனக் கூறப்படுகின்ற நிலையில், நிஷா தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அந்தச் சிறுமி தெரிவித்தார். நிஷா வீட்டில் ஐந்து பேர் அடைத்து வைத்து தன்னை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறையினரிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். இரண்டு நாட்கள் கொடுமைக்கு பின் நிஷா தன்னை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜெபினா,முபீனா பேகம், நிஷா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிறுமியை வன்கொடுமை செய்த 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் மீண்டும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

police

நேற்றுதான் சிறார்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகளை விதிக்கக்கூடிய சட்டதிருத்தங்கள் செய்யப்பட மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்குத்தண்டனை வரை நிறைவேற்றப்பட இந்த மசோதா வழிவகை செய்யும். குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்கள் தயாரிப்பது, வெளியிடுவது, அதை வைத்து வர்த்தக நோக்கில் செயல்படுவது என பாலியல் வன்கொடுமை மட்டுமின்றி இதுபோன்ற எந்த செயல்களில் ஈடுபட்டாலும் அதிகப்படியான தண்டனை விதிப்பதற்கும், அபராதம் விதிக்கவும் இந்த சட்டத்திருத்த மசோதா வழிவகை செய்யும். இப்படி சட்டங்களும், தண்டைனைகளும் கடுமையானால்தான் இதுபோன்ற பாலியல் குற்றங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கமுடியும் என்பதே உண்மை. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.