தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் எழும்பியல் துறை பேராசிரியர் ஒருவர் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்ததை அடுத்து அவர் மருத்துவக்கல்லூரியில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகார் குறித்து விசாரிக்கப்பட்ட பொழுது 126 மாணவிகளிடம் மிரட்டி கையெழுத்து பெறப்பட்டதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி அரசு கல்லூரி அரசு மருத்துவமனையில் எலும்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் கந்தசாமி. இவர் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. பயிற்சி மாணவிகளாக பணி செய்து கொண்டிருக்கும் பெண் மருத்துவ மாணவிகளிடம் வேலை நேரத்தில் எலும்பு முறிவு துறை பேராசிரியர் கந்தசாமி தவறான முறையில் பேசுவது, தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது போன்றவற்றை வழக்கமாக வைத்து இருப்பதாக புகார் கூறப்பட்டது.
மேலும் அடிக்கடி செல்போனுக்கு அழைத்து ஆபாசமாக பேசுவது, குறுந்தகவல் அனுப்புவது இதுபோன்று கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார் என்றும், பெயர் குறிப்பிட்டு புகார் அளித்தால் எங்களது வாழ்க்கை பாழாகிவிடும் என்பதால் பெயர் வெளியிடாமல் அவர் மீது புகார் அளித்துள்ளதாகவும் பெயர் குறிப்பிடப்படாத அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் குறித்து மருத்துவ பேராசிரியர் லலிதா தலைமையிலான 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், இதில் தங்களுக்கு எந்த நியாயமும் கிடைக்காது என்றும், ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஒருவரை கொண்டு மருத்துவக்கல்லூரிக்கு தொடர்பு இல்லாத இடத்தில் வைத்து நேர்மையான முறையில் விசாரணையை நடத்தினால் உதவிப் பேராசிரியர் கந்தசாமியின் நிஜமுகம் வெளிவரும் என்று பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவித்திருந்தனர்.
இது ஒரு மொட்டை பெட்டிசன் என்று கூறிய தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீன் பாலசுப்ரமணியம் இதுகுறித்து மூன்று பெண் மருத்துவர்களை வைத்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து அறிக்கை சென்னைக்கு அனுப்பி உள்ளோம் என கூறினார்.
இந்த நிலையில் தூத்துக்குடி அரசு கல்லூரி மருத்துவமனையில் எலும்பியல் துறை பேராசிரியராக பணிபுரிய கந்தசாமிக்கு தடைவிதித்து மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக பணியகத்திற்கு வருமாறு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல் நடவடிக்கைக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.