Seven years in prison for a young man who cheated in love!

கள்ளக்குறிச்சி மாவட்டம், பால்ராம்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கும் பூட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணுக்கும் அறிமுகமாகி இருவரும் நாளடைவில் காதலித்துள்ளனர். இருவருக்கும் இடையே மிக நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. பெரியசாமி, இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக சொல்லியுள்ளார். ஆனால், சொன்னபடி திருமணம் செய்துகொள்ளாமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

Advertisment

இதனால் இளம் பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி பெரியசாமி வீட்டுக்கு சென்று வலியுறுத்தி உள்ளார். அப்போது பெரியசாமி, ‘உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்’ என்று மறுத்துள்ளார். மேலும், பெரியசாமி மற்றும் அவரது தந்தை மாரி, தாய் சந்திரா, உறவினர் கருப்பு துரை ஆகியோர் சேர்ந்து அந்தப் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

Advertisment

இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மற்றும் அவரது உறவினர்கள் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். அதன் பேரில் பெரியசாமி உள்ளிட்ட அவரது உறவினர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி (பொறுப்பு) சாந்தி, நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அந்தத் தீர்ப்பில் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய பெரியசாமிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மூன்று லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற மூன்று பேர் மீதும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.