Skip to main content

எடப்பாடிக்கு கட்அவுட் வைத்தபோது விபத்து; மின்சாரம் தாக்கியதில் தொழிலாளிகள் இருவருக்கு தீவிர சிகிச்சை!!

Published on 22/10/2018 | Edited on 22/10/2018
Power supply



முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருகையையொட்டி, அவருக்கு கட்அவுட் வைக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு ஏழை கூலித்தொழிலாளிகள் மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் நேற்று (அக்டோபர் 20, 2018) சேலம் வந்தார். ஓமலூர், தாரமங்கலம் ஆகிய இடங்களில் கட்சி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.


இதையொட்டி அவரை வரவேற்கும் விதமாக கட்சியினர் சாலையின் இருமருங்கிலும் கட்அவுட்டுகள் வைத்திருந்தனர். தாரமங்கலம் பேருந்து நிலையம் எதிரில், எடப்பாடி பழனிசாமியின் கட்அவுட் உயரமாக வைக்கச் சொல்லி கட்சியினர் உத்தரவிட்டு இருந்ததால், பந்தல் தொழிலாளிகள் மணி, ராஜவேல் ஆகியோர் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு இருந்தனர்.


நேற்று அதிகாலை 3 மணியளவில் உயரமான கட்அவுட்டை வைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். கட்அவுட்டை சணல் கயிறுகளால் கட்டுவதற்காக உயரமான சாரத்தின் மீது அவர்கள் இருவரும் ஏறினர். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் வயர் அவர்கள் மீது உரசியது. மின்சாரம் தாக்கியதில் இருவரும் உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். 


மின்சாரம் பாய்ந்ததில் ஒருவருக்கு கைகள், மார்பு, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. மற்றொருவருக்கு கைகளில் மட்டும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருவருக்கும் முதல்கட்டமாக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


பின்னர் மேல் சிகிச்சைக்காக, இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்து விசாரித்தபோது, ''முதல்வர் வருகைக்காக அதிமுகவினர் கட்அவுட் வைக்கச் சொன்னார்கள். அதனால் உயரமான கட்அவுட் வைக்கும்போது மணி, ராஜவேல் ஆகிய இருவரும் மின்சாரம் பாய்ந்ததில் கீழே தூக்கி வீசப்பட்டனர். 


ஆனால் இது சம்பந்தமாக யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என்று அதிமுகவினர் சொல்லி இருக்கின்றனர். சிகிச்சைக்கான செலவுகளையும், உரிய இழப்பீடும் தருவதாகச் சொல்லி இருக்கின்றனர்,'' என்றனர்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கியதுபோல் தனக்கும் கட்சியினர் பிரம்மாண்டமான கட்அவுட்கள், தோரணங்களுடன் வரவேற்பு அளிக்க வேண்டும் என்று மறைமுகமாக உத்தரவிட்டுள்ளதாகவும், அதனால் கட்சியினர் விதிகளை மீறி கட்அவுட்டுகளை வைக்கும்போது, இதுபோன்ற அசம்பாவிதங்களும் நடப்பதாகவும் அதிமுக நிர்வாகிகள் புலம்பினர். 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாட்டின் மின்தடையை போக்க அரசு 258 கோடியே 94 லட்சம் செலவு

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

electricity


தமிழ்நாடு மின் தொடரமைப்புக்  கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில்  பல்வேறு மின் திட்டங்களை முதல்வர் இன்று திறந்து வைத்தார்  

 

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை முதலமைச்சர்  முக.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். 30  மாவட்டங்களில் 52 திறன் மின் மாற்றிகள் மற்றும் 16 துணை மின் நிலையங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று திறந்து வைத்தார். இதன் மதிப்பு 258 கோடியே 94 லட்சம் ஆகும். இந்த நிகழ்ச்சியில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

மேலும் சென்னை மாதவரத்தில் உள்ள பால் பண்ணை வளாகத்தில் கட்டப்பட்ட ஆவின் மாநில மைய ஆய்வகத்தையும் முதல்வர் இன்று திறந்து வைத்தார். பணியின் போது உயிரிழந்த 50 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது அமைச்சர் நாசர் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

 


 

Next Story

"எதிர்க்கட்சிகள் குஜராத்தை மறந்து, மறைத்து பேசி வருகிறது" - அமைச்சர் செந்தில் பாலாஜி  

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

tn minister senthil balaji press meet Power supply

 

கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கரூர் நகர பகுதியில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, "புதுக்கோட்டையில் மின் இணைப்பு வேண்டி நூதன பிரச்சாரம் குறித்த கேள்விக்கு சம்பந்தப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்கும் வழியில் மின் கம்பம் பொருத்துவதில் இரண்டு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு உள்ளது. இரு தரப்பினரிடம் சுமுக உடன்படிக்கை ஏற்பட்ட பின் அது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் உட்பட ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமாக சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

 

குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு சீரான மின் வினியோகம் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தவறான கருத்துக்களை பேசி மக்களிடம் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 6 முதல் 7 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது ஆனால் அதை விட குறைவாகவே குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு உள்ளது.

 

நிலக்கரி கையிருப்பு குறித்து தமிழகத்தை குறைகூறும் இயக்கங்கள் தான் ஆளக்கூடிய மாநிலங்களில் நிலக்கரி கையிருப்பு எவ்வளவு உள்ளது. அங்கெல்லாம் மின்வெட்டு எவ்வளவு நேரம் உள்ளது, மின் வினியோகம் எவ்வளவு நேரம் கொடுக்கப்பட்டு வருகிறது, என்பதை மறந்து மறைத்து பேசி வருகின்றனர். இதுபோன்ற பொய் பிரச்சாரம் மக்களிடத்தில் எடுபடாது. தமிழகத்தில் தற்போது காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது" என்றார்.