serial theft near tiruttani

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை வட்டம், சின்னநாகபூடி கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் ஒரே இரவில் கொள்ளையர்கள் எட்டு வீடுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கண்ட அந்த கிராமத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆனந்த வடிவேல், அவரது மனைவி சாந்தி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வீட்டில் நள்ளிரவு நேரத்தில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே கொள்ளையர்கள் சென்றுள்ளனர். வீட்டில் எதுவும் கிடைக்காததால், ஆனந்த வடிவேல் தூங்கிக் கொண்டிருந்த அறை பகுதிக்குச்சென்று அவரை உருட்டுக் கட்டையால் தாக்கி மிரட்டி அவரது மனைவி கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கத்தாலி சங்கிலியைப் பறித்துக் கொண்டு அவரையும் கடுமையான முறையில் தாக்கிவிட்டுத்தப்பி ஓடி உள்ளனர்.

இதேபோல் அதே கிராமத்தில் இரண்டு கிலோமீட்டர் தள்ளி உள்ள கணபதி என்பவரது வீட்டுக்குள் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். கணபதி ஒரு கல்யாணத்திற்காக வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரது வீட்டில்20,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த வீட்டிற்கு நேர் எதிரில் உள்ள கஜேந்திரன் என்பவர் பெங்களூரில் வசித்து வருகிறார். வாரத்தில் மூன்று முறை இந்த வீட்டிற்கு வருவார். தற்போது இவர் வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்ட திருடர்கள், அவரது வீட்டிற்குள் சென்று 2 சவரன் மற்றும் ரூ. 12,000, வெள்ளி கொலுசு ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

Advertisment

அங்கிருந்து சிறிது தொலைவில் முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் என்பவரின் வீடு உள்ளது. இவரும்வெளியூருக்குச் சென்றிருந்தார். இதனைத்தெரிந்து கொண்ட கொள்ளையர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த ரூ. 5 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். மேலும் இதேபோல், அந்தப் பகுதியில் வெளியூர்களுக்குச் சென்றிருந்தவர்களின் வீடுகளிலும் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அங்கு எதுவும் இல்லாத காரணத்தினால் கொள்ளை சம்பவம் ஏதும் நடைபெறவில்லை.

ஒரே இரவில்7 சவரன் நகை, 37 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இப்படி ஒரே இரவில் பலவீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது, அந்த கிராமத்தில் வசிக்கும் பொது மக்களை பீதி அடையச் செய்துள்ளது.