Skip to main content

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

 Senthil Balaji's bail plea dismissed

 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் வேண்டும் என்றால், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்தியிருந்தது. மேலும், அவருக்கான நீதிமன்றக் காவலை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. அதே சமயம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 6 ஆவது முறையாக 14 நாட்களுக்கு நீட்டித்து அதாவது செப்டம்பர் 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

 

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு இருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது செப்டம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அல்லி அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற  நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். சக்தி வாய்ந்த நபராக செந்தி பாலாஜி இருப்பதாகவும், தற்பொழுது வரை அவர் அமைச்சராக இருப்பதாகவும் இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்கள் கலைக்கப்படும் என அமலாக்கத்துறை வாதத்தை முன்வைத்திருந்த நிலையில் நீதிபதி அல்லி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்