Skip to main content

மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட செந்தில் பாலாஜி

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Senthil Balaji was taken back to Puzhal Jail

 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு முறை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என நீதிமன்றங்களிலும் ஜாமீன் கோரியும் ஜாமீன் பெற முடியாத நிலை நீடித்து வருகிறது. அண்மையில் உடல் நலக் குறைபாடுகளை வைத்து உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றமும் ஜாமீன் தர மறுத்தது. தொடர்ந்து அவ்வப்போது அவருக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந்நிலையில் கால் மரத்துப் போவதாகத் தொடர்ந்து கூறி வந்ததால், ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட செந்தில்பாலாஜிக்கு பின்னர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று சிகிச்சை முடிந்து இன்று மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சிறையிலும் செந்தில் பாலாஜி மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய அமலாக்கத்துறை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதற்கிடையே பலமுறை செந்தில் பாலாஜிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இத்தகைய சூழலில் மீண்டும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 1 ஆம் தேதி (01.04.2024) உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக  அமலாக்கத்துறை சார்பில் நேற்று (28.04.2024) இரவு தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக உள்ள செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இதனையடுத்து செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடுகையில், “வழக்கில் விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது. தனிநபர்களுக்குள் நடந்த கொடுக்கல், வாங்கல் விவகாரத்தை நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மோசடியாக கட்டமைக்கின்றனர்” என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. முன்னதாக அமலாக்கத்துறை மிகத் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு மே 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.