
அம்பத்தூரில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் 1760 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதியை பிடித்து விசாரித்து வருகின்றனர். மாவோயிஸ்ட் தீவிரவாதி சுந்தர் ராவ் போட்டோவையும் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 13 ஆம் தேதி சென்னை மண்டல அதிகாரிகள் ஒரு சொகுசு காரை சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடித்தனர். அந்தக் காரில் 160 கிலோ கஞ்சா இருந்துள்ளது. மேலும், அந்தக் காரில் இருந்த மூன்று நபர்களிடம் விசாரணை செய்தபோது கஞ்சா கடத்தியது தெரியவந்துள்ளது.
கஞ்சா எங்கிருந்து கொண்டுவரப்பட்டதென காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அரக்கு மலைப்பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போதைப் பொருள் தடுப்பு காவல்துறையினர் ஆந்திர மாநிலம் அரக்கு மலைக்கு விரைந்தனர்.
ஆந்திரா போலீசார் 20 பேர் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, எட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் ஒருவர் அங்கு இருப்பதைக் கண்டறிந்தனர். அவரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவருடைய பெயர் சுந்தர் ராவ் என்பது தெரியவந்துள்ளது. சுந்தர் ராவ், தனது வீட்டில் 1760 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்திருக்கிறார்.
சென்னை மண்டல போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த சுந்தர் ராவை (வயது 39) கைது செய்து சென்னைக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.