Skip to main content

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? -பதிலளிக்க பள்ளி கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

schools fees chennai high court

 

 

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 75 சதவீதத்தை வசூலித்து கொள்ளலாம்.  அதில் 40 சதவீத கட்டணத்தை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மீதத் தொகையை பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு வசூலிக்கலாம் என,  கடந்த ஜூலை 17-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

 

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது,  தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகளுக்கு எதிராக, தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்த நீதிமன்றம், புகார் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தாளாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

 

அதேபோல கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீதான புகார்களை பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.எஸ்.இ. சென்னை மண்டல அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தது.

 

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (14/10/2020) மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.எஸ்.இ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 32 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்து, சமமந்தப்பட்ட பள்ளிகளின் விவரங்களை சமர்ப்பித்தார்.

 

சம்பந்தப்பட்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது மீதான புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, கூடுதல் கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகள், தங்கள் மீதான புகார் குறித்து விளக்கமளிக்கும் வகையில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

 

அப்போது, தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நீதிமன்ற உத்தரவுப்படி 40 சதவீத கட்டணத்தை கூட இன்னும் பல பெற்றோர்கள் செலுத்தாத சூழல் நிலவுவதாகவும், பள்ளிகள் எந்த நிர்ப்பந்தமும் பெற்றோர்களுக்கு அளிக்கவில்லை என எடுத்துரைத்தனர். ஆனால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதாகவும் தெரிவித்தார்.

 

பள்ளிகள் திறந்த உடன் 30 சதவீத கட்டணத்தை வசூலித்து கொள்ளலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என இதுவரை எந்த அறிவிப்பும்  இல்லாததால், 30 சதவீத கட்டணத்தை வசூலித்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் எனவும், தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால் பள்ளிகள் ஆசியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட இதர செலவுகளை சமாளிக்க கஷ்டப்பட்டு வருவதாகும் பள்ளிகள் தரப்பில் தெரிவித்தனர்.

 

அப்போது நீதிபதி, தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என தெரிவிக்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டார். இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லாவிட்டால், ஏற்கனவே 40% வசூலித்த வசூலிக்க அனுமதித்தது போல அடுத்த கட்ட தொகையை வசூலிக்க அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” - உயர்நீதிமன்றம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ban on using OPS aiadmk symbol will continue says Madras High Court

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்,  அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.