Skip to main content

9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவி நடுக்காட்டில் எலும்புக்கூடாகக் கண்டெடுப்பு

 

A schoolgirl who went missing 9 months ago was found as a skeleton in the middle of the forest

 

அரூர் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவியின் உடல் காட்டின் மையப்பகுதியில் எலும்புக்கூடுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எஸ்.அம்மாபாளையம் முள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பெருமாள். இவருடைய மகள் ஞானசௌந்தர்யா கோயம்புத்தூரில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பொதுத்தேர்வை முடித்துவிட்டு தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்து பங்கேற்றுள்ளார்.

 

திருவிழா நடைபெறும் பொழுது இவர் காணாமல் போனதாகவும், தனது மகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்து இவருடைய பெற்றோர் கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர்.  காவல்துறையினர் மற்றும் இவருடைய பெற்றோர், உறவினர்கள் என அனைவரும் கோயம்புத்தூர், திருப்பூர், அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எங்கு தேடியும் மாணவி குறித்து எந்த ஒரு தகவலும் சேகரிக்க முடியவில்லை.

 

bb

 

தன்னுடைய மகள் உயிரோடுதான் யாருடைய பாதுகாப்பிலோ உள்ளார் என எண்ணியிருந்த இவருடைய தந்தை பெருமாளுக்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், எஸ்.அம்மாபாளையம் அருகே உள்ள மலைப்பகுதியில் ஒரு சடலம் தூக்கில் தொங்கியபடி இருந்ததாகவும், ஆனால் உடலில் தசைப்பகுதிகள் எதுவும் இல்லாமல் ஒரு சில எலும்புக்கூடுகள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தனது மகளாக இருக்குமோ என எண்ணி இவருடைய தந்தை மற்றும் உறவினர்கள் அங்குச் சென்று பார்த்தபோது தனது மகள் தான் என்று உறுதி செய்தனர்.

 

இது குறித்து கோட்டப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு சோதனை செய்து, அங்கு இருந்த எலும்புக்கூடுகள், அவர் பயன்படுத்திய வாட்ச் உள்ளிட்டவற்றை சேகரித்து டிஎன்ஏ சோதனை மற்றும் உடற்கூராய்விற்காக எடுத்துச் சென்றனர். இந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கடந்த, 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பெண்ணின் உடல் அடர்ந்த காட்டுப்பகுதியில் எலும்புக்கூடுகளாக மட்டுமே கிடைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !