
தமிழ்நாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளின் மனநிலை அவசர முடிவுகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே வாரத்தில் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் அடுத்தடுத்து சில நாட்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவங்கள் பெற்றோர்களை கலங்கச் செய்து வருகிறது.
இந்த வார தொடக்கத்தில் புதுக்கோட்டை முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் மாதேஸ்வரனிடம் தலை முடியை வெட்டி வரச்சொன்னதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இந்த பரபரப்பு முடிவதற்குள் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயில் காவல் சரகத்தில் ஒரு கிராமத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி காலாண்டுத் தேர்வில் கணக்குப் பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால் அம்மாவும், அண்ணனும் திட்டுவார்கள் என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் அப்பா சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட, குடும்ப சுமை அம்மா மற்றும் 17 வயது அண்ணன் ஆகியோரிடம் இறக்கி வைக்கப்படுகிறது. குடும்ப வறுமை காரணமாக தன் படிப்பை நிறுத்திவிட்டு தங்கை படிக்க வேண்டும் என்பதற்காக அண்ணன் ஒரு சிகை அலங்கார கடையில் வேலைக்கு செல்கிறார். அந்த வருமானத்தில் தான் குடும்பமே பசியாற வேண்டும். தங்கைக்கான படிப்பு உள்ளிட்ட செலவுகளும் அதில்தான் பார்க்க வேண்டும்.
இப்படியான குடும்பத்தில் பிறந்த மாணவி, தாய் வீட்டில் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்குள் சென்று பார்த்த வயதான தாத்தா அதிர்ச்சியடைந்து கதற அக்கம் பக்கத்தினர் வந்து மாணவியின் சடலத்தை இறக்க ஆவுடையார்கோயில் போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி தூக்கில் தொங்கிய இடத்தில் இருந்த கடிதத்தில், “அன்புள்ள அம்மாவுக்கும் அண்ணனுக்கும், நான் படிக்க லாயக்கில்லை என்று சொல்லுவிங்க, ரெண்டு பேரும் திட்டுவிங்க. ஆனாலும் நான் பரிட்சை நல்லா எழுதலன்னு நீங்க (அண்ணா) அம்மா சொல்லிச்சு. 'நீங்க அம்மாகிட்ட சொன்னிங்களாம்ல அவ தூங்கினாலும் தண்ணிய ஊத்தி எழுப்புவேன்’ என்று, ஆனால் என்னை யாராலும் எழுப்ப முடியாது. அம்மாவ பத்திரமா பாத்துக்க, அதுவுடன் சண்டைப் போடாத. எப்படியும் நான் கணக்குல பாசாகலனு திட்டுவிங்க. அதனால தான் இப்படி ஒரு முடிவு எடுக்குறேன். என்னைய எதுவும் சொல்லாதிங்க. அதனாலதான் அப்பாகிட்ட போகிறேன். அம்மா, அண்ணா உங்களை விட்டு பிரிய எனக்கு மனசு இல்லை. அம்மா - அண்ணா ஐ லவ் யூ..” இப்படித்தான் அந்தக் கடிதம் முடிகிறது. கடிதத்தை படித்து முடிப்பதற்குள் அத்தனை பேருக்கும் கண்ணீர் வந்துவிடுகிறது.
மாணவ, மாணவிகளின் இது போன்ற செயல்களில் இருந்து மாற்ற உடனே ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் கலந்தாய்வுகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.