Skip to main content

பள்ளி மாணவர் தற்கொலை விவகாரம்; ஆட்சியரை சந்தித்த ஆசிரியர்கள்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

School student incident Teachers who met the Collector

 

புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி +2 மாணவர் மாதேஷ்வரன் திங்கள் கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மாணவரின் உறவினர்களின் போராட்டத்தையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி மாணவர்களிடம் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கச் சொன்ன தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளதை ஏற்க முடியாது என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் வெளியாகும் நிலையில், தலைமை ஆசிரியர் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் தங்கமணி தலைமையில், ஏராளமான மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை அரசு முன்மாதிரிப் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கும் பள்ளித் தலைமை ஆசிரியருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி பள்ளி நலன் கருதி மாணவர்களின் ஒழுங்கு கட்டுப்பாட்டை நெறிப்படுத்தும் நோக்கில் சிகை அலங்காரத்தை சரி செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர் எதிர்மறையாக எடுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

School student incident Teachers who met the Collector

 

மேலும் தற்கொலை சம்பவம் பள்ளிக்கு வெளியே நடந்துள்ளது. இதற்குத் தலைமை ஆசிரியரோ, ஆசிரியர்களோ கூறிய அறிவுரைக்கும் தொடர்பில்லாத நிலையில், தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்திருப்பது வருந்தத்தக்கது. தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கத்தால் மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் மாணவர்களின் ஒழுக்கத்தில் பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். எனவே எதிர்கால சமுதாய நலன் கருதி, வளமான சமுதாயம் அமைந்திடத் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதேபோல அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பும் ஒருங்கிணைந்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரி போராட்டங்கள் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்