Skip to main content

சாத்தான்குளம் வழக்கு... சி.பி.சி.ஐ.டி. அலுவகத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் விசிட்!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020
sathankulam cbi and cbcid

 

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை கொலை வழக்கு தொடர்பாக முதலில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வருகை தந்து அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று கொண்டனர். அதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொண்டிருந்தனர். முதற்கட்டமாக 5 காவலர்களும், இரண்டாம் கட்டமாக 3 காவலர்களும் சி.பி.ஐ. காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், தற்போது மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து கூடுதல் எஸ்.பி. சுக்லா தலைமையிலான சி.பி.ஐ அதிகாரிகள், தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு திடீர் வருகை தந்துள்ளனர்.

 

வழக்கின் அடுத்தகட்ட நகர்வு குறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் அதே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மகேந்திரன் என்பவர் உயிரிழந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.