Skip to main content

ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு - நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தகவல்!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

Sasikala is likely to be released on January 27th! -Information provided by the lawyer appearing in the Income Tax case!

 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இம்மாதம் 27 ஆம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சசிகலாவுக்கு எதிராக வருமான வரித்துறை கடந்த 2008-ம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இம்மாதம் 27 ஆம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதால், அவரிடம் விளக்கங்கள் பெற்று பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்கவேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

 

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். கடந்த 1994 - 95 ஆம் ஆண்டில், சசிகலா தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கில் 4 லட்ச ரூபாயைக் குறைத்துக் காட்டியதாக மதிப்பீட்டு அதிகாரி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்ததை எதிர்த்து, வருமான வரித்துறை ஆணையர் கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்குதான் விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு; பொன்முடி வழியில் ஐ.பெரியசாமி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
order from judge in I.Periyaswamy case; its going on Ponmudi way

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தண்டனை மேல்முறையீட்டு வழக்கில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் அமைச்சர் பதவியை பெரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டுவசதி துறையில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்படுவதாக அளிக்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை ஐ.பெரியசாமி தரப்பு எடுத்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அதிகாரத்தை பயன்படுத்தி அன்றைய முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் ஒருவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

 I.Periyaswamy on Ponmudi way

இந்த வழக்கினுடைய விசாரணை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அந்த தீர்ப்பில், 'சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கு சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். முறையாக ஒப்புதல் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மேலும், மார்ச் 28ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய் பிணை செலுத்த வேண்டும் எனவும் ஐ.பெரியசாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விசாரணையை சிறப்பு நீதிமன்றம் 2024 ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் கொடுத்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

‘ஷேக் ஷாஜகானை கட்டாயம் கைது செய்ய வேண்டும்’ - மேற்கு வங்க அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
- Court orders West Bengal government to Sheikh Shahjahan must be arrested

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஷாஜகான் ஷேக் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த சம்பவங்களை எல்லாம் வெளியே கூறினால் கடுமையான பின் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளார் ஷாஜகான் ஷேக்.

இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் ரேஷன் பொருட்கள் ஊழல் தொடர்பாக ஷாஜகான் ஷேக் வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகளை ஷாஜகான் ஷேக் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் தப்பிய ஷாஜகான் ஷேக் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி கிராமத்து பெண்கள், ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஷாஜகான் ஷேக்கின் கூட்டாளிக்குச் சொந்தமான கோழிப் பண்ணைகளைப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருவதால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் சுகந்த மஜும்தார் உட்பட பா.ஜ.க.வினர், ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். பெண்களின் இந்த போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையக் குழு சந்தேஷ்காலி கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், சந்தேஷ்காலியில் உள்ள பெண்கள், உடல்ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்று கூறப்பட்டது. 

இதற்கிடையே, சந்தேஷ்காலி விவகாரத்தை கொல்கத்தா உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (26-02-24) நடந்தது. அப்போது, ‘சந்தேஷ்காலி பகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பே காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் 42 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும், ஷேக் ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

நான்கு ஆண்டுகளாகக் கைது செய்யப்படாதது ஆச்சரியமாக உள்ளது. கைதுக்கு இடைக்காலத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை. எனவே, ஷேக் ஷாஜகான் கட்டாயம் கைது செய்யப்பட வேண்டும். அவருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செய்தித்தாள்களில் தகவல் வெளியிட வேண்டும்’ என்று கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை மார்ச் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.