Skip to main content

கரோனா பொது முடக்கத்திலும் மணல்கொள்ளை!!! சிக்கிய லாரிகள், பேரத்தில் அதிகாரிகள்!!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020
h



கரோனா வைரஸ் தாக்குதலால் ஒட்டுமொத்த உலகமும் விழிபிதுங்கி நிற்கிறது. பொது முடக்கத்தால் ஏழை முதல் பணக்காரர்கள் வரை இனி என்ன நடக்குமோ என்கிற பீதியில் உறைந்து கிடக்கின்றனர். ஒட்டுமொத்த பொருளாதாரமும் படுபாதாளத்தில் கிடக்கிறது. இப்படிபட்ட இக்கட்டான சூழ்நிலையில், எந்தவித அச்சமும் இல்லாமல், சட்டத்திற்கு புறம்பாக மணல் கொள்ளையில் ஈடுபட்ட 32 லாரிகள் பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.


காட்டுமன்னார்குடி அருகே உள்ள முட்டத்திற்கும், மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேட்டிக்கும் இடையே  உள்ள கொள்ளிடம் பாலத்தில் இரவு சாரை சாரையாக லாரிகள் விரைந்து செல்வதை, இரவு காவல் பணியில் இருந்த காவலர்கள் சிலர் கவனித்து அந்த லாரிகளை மறித்து சோதனை செய்தனர். அதில் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கரோனா பொது முடக்கத்திலும் இப்படி ஒரு கொள்ளையா என அதிர்ச்சியோடு அத்தனை லாரிகளையும் மணலோடு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினர். காட்டுமன்னார்குடி காவல் நிலையத்திலிருந்து எம்.ஆர்.கே. கல்லூரி வரை வரிசையாக லாரிகள் நிற்பதை ஒட்டுமொத்த காட்டுமன்னார்குடி மக்களும் வாய்பிளந்து பார்க்கின்றனர்.

இது குறித்து காவல்துறையிடம் விசாரித்தோம், "தஞ்சை மாவட்டம் கும்பகோணம், அனைக்கரை பகுதியில் இருந்து நள்ளிரவில் மணல் கடத்தி செல்வதாக எங்களுக்கு ஏற்கனவே பலமுறை தகவல் வந்தது. ஆனால் காவலர்கள் பற்றாக்குறையால் மற்ற பணிகளுக்கே நேரம் சரியாக இருந்தது.  ஆனால் ஒரே நேரத்தில் ஐம்பது லாரிகள் மணல் கடத்திவருவதாக எங்களுக்கு தகவல் வந்ததையடுத்து தயாராக காத்திருந்து பிடித்தோம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய பிரமுகராக இருந்துவரும் குடவாசல் எம்.ஆர், ராஜேந்திரனின்  உறவினரான அரவிந்த் என்பவர் அங்குள்ள காவல்துறையை சரிகட்டி, கள்ளத்தனமாக கரோனா பொது வேலை முடக்கத்திலும் மணல் கொள்ளையடிக்கிறார். இரண்டு முறை அவர்களை கண்டித்து விட்டோம். மூன்றாவது முறை பிடித்துவிட்டோம், வழக்குப் போட இருக்கிறோம்" என்கிறார்கள்.

 

 


இதற்கு இடையில் காவல்துறையில் உள்ள மேல்மட்ட அதிகாரிகள் மூலம் வழக்கு போடாமல் சரி கட்டுவதற்கான பேரம் பேசும் வேலையும் நடந்து வருவதாக, அங்கு உயிரை பணயம் வைத்துபிடித்த கடைநிலை காக்கிகள் கிசுகிசுக்கின்றனர். ஊரடங்கால் அடுத்தநாள் உணவுக்கு வழியின்றி எத்தனையோ உயிர்கள் கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் போய்க்கொண்டிருக்கிறது. வேலையில்லாமல் பசியால் உயிர் இழந்த தாயை எழுப்பும் அவலத்தை கண்டு ஒட்டுமொத்த இந்தியாவும் வெட்கித் தலைகுனிந்துள்ளது, ஆனால் சோறுபோடும் பூமியை, ஊரடங்கிலும் கூறுபோடும் மணல் மாஃபியாக்களின் மணல் கொள்ளையும் அமைதியாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மணல் தேவையை பூர்த்தி செய்ய என்எல்சி நிறுவனம் புதிய திட்டம் தொடக்கம்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
 NLC Company launches new project to meet sand demand

நெய்வேலியில் உள்ள சுரங்கம்-1 அ பகுதியில், பழுப்பு நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக நீக்கப்படும் மேல் மண்ணிலிருந்து, ‘எம்-சாண்ட்’ (M-Sand) எனப்படும் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் மணல் தயாரிக்கும் ஆலை அமைப்பதற்கான பூமி பூஜை, நடைபெற்றது. இதில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவரும் மற்றும் மேலாண் இயக்குநருமான பிரசன்னகுமார் மோட்டுபள்ளி தலைமை தாங்கி பணியை துவக்கி வைத்தார்.

நிலக்கரி அமைச்சகத்தின் பசுமை முன் முயற்சிகளுக்கு இணங்க, இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்காகவும், சுற்றுச்சூழல் மற்றும் நதி சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்காகவும், “கழிவிலிருந்து வளம்” என்ற கருத்தை நடைமுறைப்படுத்திட இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

இது போன்ற, பசுமை முயற்சிகளை செயல்படுத்தும் நடவடிக்கைகளில் என்எல்சி இந்தியா நிறுவனம் எப்போதும் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆலையானது, சுரங்கத்தில், மேல்மண் நீக்கத்தில் இருந்து பெறப்படும் மண்ணில் இருந்து, ஆண்டுக்கு 2.62 லட்சம் கன மீட்டர், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் தரமான ‘எம்சாண்ட்’ என்ற மணலை உற்பத்தி செய்யும். மேலும், வருகின்ற 2024 ஜனவரி மாத இறுதிக்குள் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம், தற்போதைய அதிகபட்ச மணல் தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன், இயற்கை வளமான மணல், அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுவது குறையும் என்றும் கருதப்படுகிறது. மேலும் நெய்வேலியில் உள்ள இதர சுரங்கங்களான, சுரங்கம்-1 மற்றும் சுரங்கம்-2 ஆகியவற்றிலும் இதே போன்று மற்றும் இதைவிட அதிகத் திறன் கொண்ட மணல் ஆலைகள், விரைவில் நிறுவப்படும் என்று நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத் தலைவர், இந்த ஆலையை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது என்றும், இது போன்ற சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும், பசுமை முயற்சிகள் வருங்காலங்களில், நிறுவனத்தில் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.

இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில், நிறுவனத் தலைவர் அவர்களுடன் நிறுவன நிர்வாக இயக்குநர்கள், செயல் இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story

மணல் லாரிகளை எம்.எல்.ஏ மிரட்டுகிறார்; மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Truck Owners Association President alleges that MLA  threatening sand trucks

 

வேலூர் மாவட்டம் கந்தநேரியில் உள்ள அரசு மணல் கிடங்கில் இருக்கும் ஆற்று மணலை முறையாக ஆன்லைன் மூலம் பதிவு செய்து மணல் எடுக்க அனுமதிக்கப்பட்ட லாரிகளுக்கு 3 தினங்களுக்கு மேலாக மணல் கொடுக்காமல் காத்துக் கிடக்க வைத்துவிட்டு, மணல் எடுக்க பதிவு செய்யாத லாரிகளுக்கு இரவு பகலாக கள்ளத்தனமாக அரசு அதிகாரிகளின் துணையோடு, லோடு லோடாக மணல் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்து முறையாகப் பதிவு செய்த லாரிகளுக்கு மணல் வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்தனர்.

 

Truck Owners Association alleges that MLA  threatening sand trucks

 

அதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் நிலவி வரும் ஆற்று மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்திக் கொண்டு வேலூர் கந்தனேரி மணல் குவாரியில் திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரும், ஒன்றிய கவுன்சிலரும் சேர்ந்து உள்ளூர் ரவுடிகளை வைத்துக் கொண்டும் அரசு அதிகாரிகளோடு கைகோர்த்துக் கொண்டும், ஆன்லைன் மூலம் பதிவு செய்த லாரிகள் வாரக்கணக்கில் நின்று கொண்டிருக்க, இரவு நேரங்களில் சட்ட விரோதமாக அனுமதி பெறாத லாரிகளில் டன் கணக்கில் மணல் கடத்துகிறார்கள். 

 

ஆகவே இதுபோன்று அநீதி இழைப்பதை தடுத்து நிறுத்தி, ஆன்லைன் மூலம் பதிவு செய்து மணல் எடுக்க காத்துக் கொண்டிருக்கும் லாரிகளுக்கு காவல்துறை முன்னிலையில் மணல் வழங்கிட வேண்டும். அதேபோன்று மணல் கடத்தலில் ஈடுபடும் உள்ளூர் குண்டர்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கிடங்கில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.