தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் கழிவுநீர் வடிகாலுக்கு மேலாக இரும்புக் குழாய்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பாதையில் தூய்மைப்பணியாளர் சிக்கிக்கொண்ட நிலையில் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தின் முன்புற மற்றும் பின்புற வாசலில் கழிவுநீர் வடிகாலுக்கு மேலாக இரும்புக் குழாய்களைக் கொண்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப்பணிக்காக வந்த தற்காலிகத் தூய்மைப்பணியாளர் சக்திவேல் அந்த இரும்புக்குழாய் பாதையை கடக்கும் பொழுது அவரது கால் எதிர்பாராத விதமாக இரும்புக் குழாய்களுக்கு இடையில் சிக்கியது. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் அவரால் காலை வெளியே எடுக்கமுடியவில்லை. இறுதியில் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் 'கேஸ் வெல்டிங்' கொண்டுவரப்பட்டு இரும்புக்குழாய் வெட்டி எடுக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டார்.
இதேபோல் கடந்த டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் பதிக்கப்பட்டிருந்த இரும்புக் குழாய்ப் பாதையில், முதியவர் ஒருவர் சிக்கிக்கொண்ட நிலையில், பல்வேறு முயற்சிகளுக்கு பின் மீட்கப்பட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி பொன்னங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்ற முதியவர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்துக்குச் சென்று திரும்புகையில், வாயிலில் இரும்புக் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்த பாதையில், குழாய்களின் இடுக்கில் சிக்கிக்கொண்டார். இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாகக் கடப்பாரை கொண்டு முதியவரை மீட்க முயச்சித்தனர். ஆனால், முடியாததால் கடைசியில் ஜே.சி.பி கொண்டு இரும்புக் குழாய்கள் வளைக்கப்பட்டு முதியவர் மீட்கப்பட்டார்.
தொடர்ந்து இரண்டாவதுமுறை இதுபோன்ற விபத்து அதுவும் வெவ்வேறு மாவட்ட ஆட்சியர் அலுவகத்தின் வாசலில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.