Skip to main content

சேலம் எஸ்ஐ 6 லட்சம் 'லபக்'; விரக்தியில் வாலிபர் போலீசார் முன்பு விஷம் குடிப்பு!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020


சேலத்தை அடுத்த அல்லிக்குட்டையைச் சேர்ந்தவர் சதீஷ் (35). கடந்த சில ஆண்டுக்கு முன்பு, வீராணம் காவல் நிலையத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்றி வந்தார்.

 

 

salem youth incident hospital police si

அப்போது சதீஷூக்கும், அந்த காவல் நிலையத்தில் போலீஸ் எஸ்ஐ ஆக பணியாற்றி வந்த சத்தியமூர்த்தி என்பவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இந்த நட்பின் அடிப்படையில் சதீஷிடம் இருந்து அவசர தேவைகள் இருப்பதாகக் கூறி எஸ்ஐ பணம் வாங்கி உள்ளார். சில தவணைகளாக இந்தப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 லட்சம் ரூபாய் வரை சதீஷ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, ஒரு விபத்தில் சிக்கிய எஸ்ஐ சத்தியமூர்த்தி, தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். பின்னர் அவர் வீராணம் காவல் நிலையத்தில் இருந்து சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

 

அவரை சந்தித்த சதீஷ், தான் கொடுத்த 6 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு எஸ்ஐ, நான் பணமே வாங்காதபோது உனக்கு எதற்கு தர வேண்டும்? எனக்கேட்டுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ், பலமுறை அவரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டு அணுகியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

 

இதுகுறித்து சதீஷ், சேலம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 07.00 மணியளவில் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு வந்த சதீஷ், எஸ்ஐ சத்தியமூர்த்தியை பார்க்க முயற்சித்துள்ளார். அப்போது பணியில் இருந்த காவலர்கள், வருகைப்பதிவேடு பணிகள் நடப்பதால் பிறகு வாருங்கள் எனக்கூறியுள்ளனர்.

 

பின்னர் காவல் நிலையத்திற்கு வெளியே சதீஷ் காத்திருந்தார். எஸ்ஐ சத்தியமூர்த்தி, காவலர்கள் சிலரும் அங்கு வந்தனர். அப்போது சதீஷ், என் பணத்தை தராமல் ஏமாத்திட்டீங்க. நான் சாகப்போகிறேன் என்று சொல்லியபடியே, தான் மறைத்து வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்து குடித்தார். அதிர்ச்சி அடைந்த காவலர்கள் அவரை மீட்டு, உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

காவல் நிலையம் அருகே போலீசார் முன்பே வாலிபர் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான். பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் அவர், தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவரது வழக்கமான நக்கல் கலந்த பாணியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் தற்போது மன்சூர் அலிகான் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.