SALEM

சேலம் அழகாபுரம் குடிநீர் வாரிய குடியிருப்பை சேர்ந்த பாத்திரக்கடை அதிபர் ஒருவர், கடந்த ஜூலை 4ம் தேதி, சொந்த வேலையாக அருகில் உள்ள சிவாய நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் வந்து அவருடைய காரை மறித்தனர்.

Advertisment

பணம் பறிக்கும் நோக்கில் வேண்டுமென்றே தகராறில் ஈடுபட்ட அவர்கள், கத்தி முனையில் பாத்திரக்கடை அதிபரிடம் இருந்த 16 ஆயிரம் ரூபாயை பறிக்க முயன்றனர். அதற்குள் அங்கு மக்கள் கூட்டம் கூடியதால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

Advertisment

இதுகுறித்த புகாரின்பேரில், அழகாபுரம் காவல்துறையினர் விசாரித்தனர். சேலம் பெரியபுதூர் ஒடச்சக்கரையைச் சேர்ந்த கணேசன் மகன் அரவிந்த் என்கிற அரவிந்தகுமார் (22), அர்த்தநாரி கவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்த குமார் மகன் விஜய் என்கிற விஜயகுமார் (23), காந்தி நகரைச் சேர்ந்த பரமசிவம் மகன் பூபாலன் (24) ஆகிய மூவரும்தான் மேற்படி பாத்திரக்கடை அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்றனர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை ஜூலை 7ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

கைதானவர்களில் அரவிந்தகுமார், விஜய் என்கிற விஜய்குமார் ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு, ஜூன் மாதம் நடந்த ஆட்டோ கோபால் என்பவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என்பதும் தெரிய வந்தது. பூபாலன் மற்றும் விஜயகுமார் ஆகியோருக்கு கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் துணிக்கடை அதிபரை மிரட்டி பணத்தை கொள்ளை அடித்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. மேலும், ஆட்டோ கோபால் கொலை வழக்கில் பூபாலன் ஏற்கனவே ஒருமுறை குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு இருந்திருக்கிறார்.

Advertisment

இந்நிலையில், பிடிபட்ட மூவரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும், அவர்கள் சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததாலும் அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்படி, மூவரையும் ஆக. 5ம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் கைது ஆணை நேரில் சார்வு செய்யப்பட்டது.