சேலத்தில், குளிர்பான கடைக்குள் புகுந்து திருமணத்திற்கு மறுத்த 25 வயது இளம்பெண்ணை 55 வயது கொலையாளி கத்தியால் கழுத்து அறுத்துக் கொலை செய்த சம்பவத்தின் பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்தவர் இனாமுல்லாஹ் (55). அப்பகுதியில் உள்ள ஆசாத் நகரைச் சேர்ந்த ஷெரீன் சித்தாரா பானு (25) என்பவரை வெள்ளிக்கிழமை காலை (ஏப்ரல் 5, 2019) அவர் பணியாற்றி வந்த குளிர்பான கடைக்குள் புகுந்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பிறகு அவரும் அதே கடைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதியிருந்த தற்கொலை குறிப்பு கடிதத்தில், இருவரும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், ஒருகட்டத்தில் சித்தாராவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அனுமதி கேட்டதற்கு அவர் மறுத்ததாகவும், அதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
கொலையாளி இனாமுல்லாஹ், சூரமங்கலம் பகுதியில் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தினரிடையே முக்கிய பிரமுகராக இருந்து வந்துள்ளார். மேலும், அவர் பல ஆண்டுகளாக துபை, குவைத் போன்ற அரபு நாடுகளுக்கு முஸ்லிம் பெண்களை வேலைக்கு அனுப்பி வைக்கும் வேலைகளையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் தனக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருமாறு சித்தாரா பானு அவரை அணுகியுள்ளார்.

அவருடைய அழகில் மயங்கிய இனாமுல்லாஹ், சித்தாராவுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தராமல் தொடர்ந்து சாக்கு போக்கு சொல்லி வந்துள்ளார். இது தொடர்பாக இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதில் இனாமுல்லாஹ் அவர் மீது காதல் வசப்பட்டது தெரிய வந்துள்ளது. சித்தாராவும் அவரின் கனிவான பேச்சில் மயங்கியுள்ளார்.
இருவரும் நெருங்கிப்பழகுவது தெரிய வந்ததால், சித்தாராவின் கணவர் அவரை விவாகரத்து செய்துள்ளார். அதற்கான வேலைகளையும் இனாமுல்லாஹ்தான் முன்னின்று முடித்துக் கொடுத்துள்ளார். அதன்பின்னர் இருவருக்கும் இன்னும் நெருக்கமாகி, உடல் அளவிலும் தொடர்பு வைத்துக்கொள்ளும் வரை சென்றுள்ளது.

இதனால் இனாமுல்லாஹின் மனைவியும் அவரை பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில்தான், சித்தாராவை திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையைத் தொடர விரும்பிய இனாமுல்லாஹ் அவரின் சம்மதம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். திருமணத்திற்கு சித்தாரா சம்மதிக்காததால் அவரை தீர்த்துக்கட்டிவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளவும் முன்பே தீர்க்கமாக திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சித்தாராவை கொலை செய்வதற்காகவே இனாமுல்லா, ஒரு கத்தியை கடையில் வாங்கியுள்ளார். அந்த கத்தியில் அவர் தனது பெயரை பொறித்துள்ளார். இதை வைத்துதான், சித்தாராவை தீர்த்துக்கட்ட இனாமுல்லாஹ் முன்பே முடிவு செய்திருப்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சித்தாராவுக்கு கடந்த மார்ச் 6ம் தேதியிட்டு இனாமுல்லாஹ் ஒரு கடிதம் எழுதியிருந்துள்ளார். 9 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சித்தாரா, நாம் இருவரும் இன்றைய நிலையில் வெறுத்து ஒதுங்கி கோபமாக இருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்ச கணக்கு வைத்துக்கொண்டாலும்கூட நாம் இருவரும் 150 தடவைக்கு மேல் உடலால் ஒன்று சேர்ந்துள்ளோம்.
இதை நம் இருவரின் குடும்பத்தாரும் மிக சாதாரணமாகக் கருதி ஒதுங்கிக்கொண்டாலும், நாம் செய்த பெரும் பாவத்தை அல்லாஹ் மறந்துவிடுவானா? அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து நாம் மீள முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால், நம் இருவருக்கும் இந்த நிமிடம் வரை அல்லாஹ் ஒரு சந்தர்ப்பத்தை தந்துள்ளான்.
சித்தாரா, உனக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. நம்முடைய தவறான செயலால் ஏற்பட்ட பெரும் பாவத்தை அல்லாஹ் மன்னிக்க, முதல் குற்றவாளியான நானும், இரண்டாவது குற்றவாளியான நீயும் அல்லாஹ்விடம் இருந்து தப்பிக்க, நாம் இருவரும் உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் இனாமுல்லாஹ் தெரிவித்துள்ளார்.