சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (40). விவசாயி. இவருடைய மனைவி பரிமளா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சதாசிவம், சொந்தமாக ஜேசிபி இயந்திரம் மற்றும் இரண்டு டிராக்டர் வைத்து விவசாயப் பணிகளுக்கு வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் (ஜூன் 21) நள்ளிரவில், வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற சதாசிவம் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த உறவினர்கள், அவரை பல இடங்களிலும் தேடினர்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு சிறிய பாலத்தின் அருகில், சதாசிவத்தின் இருசக்கர வாகனம் நிற்பதாக அந்த வழியாகச் சென்றவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் கூறினர். தகவல் கிடைத்த இடத்திற்குச் சென்று அவர்கள் பார்த்தபோது, அந்தப் பாலத்தின் அடியில் சதாசிவம் தலைக்குப்புற சடலமாக் கிடந்தார். இதைப் பார்த்ததும் அதிர்ந்துபோன அவருடைய மனைவியும், உறவினர்களும் இதுகுறித்து ஏத்தாப்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
வாழப்பாடி டிஎஸ்பி சூரியமூர்த்தி, ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் (பொ) சுப்ரமணி மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்தனர். சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து சதாசிவத்தை மர்ம நபர்கள் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. அவருடைய கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டு இருந்தது. கை, கழுத்து பகுதிகளில் வெட்டுக்காயங்களும் இருந்தன.
சடலம் கிடந்த இடத்தில் இருந்து சுமார் 500 அடி தூரத்தில் வீட்டின் அருகே ஒரு தொட்டி இருக்கிறது. அதில் ரத்தக்கறைகள் படிந்து இருந்தது. சதாசிவத்தை மர்ம நபர்கள் தொட்டி அருகே கொலை செய்துவிட்டு, சடலத்தை பாலத்தின் அடியில் வீசிச்சென்று இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். சம்பவ இடத்தில் இருந்த விரல் ரேகை உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பெண் விவகாரம் அல்லது கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.