அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு, 50 சதவீத இட ஒதுக்கீடு, கலந்தாய்வு மூலம் பணி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வியாழக்கிழமையன்று (ஜூலை 18) புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்மருத்துவமனைக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் 5000க்கும் மேற்பட்ட நோயாளிகள் புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

மருத்துவர்கள் போராட்டத்தால், இன்று புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை நோயாளிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இந்த போராட்டம் குறித்து அறியாத நோயாளிகள் பலர், மருத்துவமனைக்கு வந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். முதியவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பயிற்சி மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளித்தனர். என்றாலும், அவர்களால் ஒட்டுமொத்த புறநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க இயலவில்லை.
இதுகுறித்து மருத்துவர் செந்தில்குமார் கூறுகையில், ''எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் எங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை. அதனால் இன்று ஒரு நாள் மாநிலம் முழுவதும் இரண்டு மணி நேரம் புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த போராட்டத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்,'' என்றார்.