salem district, periyar university assistant professor, student

Advertisment

சேலம் பெரியார் பல்கலைக்கழகஆங்கிலத்துறை உதவிபேராசிரியர், தன்னிடம் படித்த மாணவியைக் காதலித்து திருமணம் செய்தசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறையில் உதவி பேராசிரியராக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் பணியாற்றி வருகிறார்;திருமணம் ஆகாதவர். இதே பல்கலைக்கழகத்தில் தர்மபுரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் எம்.ஏ., ஆங்கிலம் இறுதியாண்டு படித்து வருகிறார். அந்த மாணவி, பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்.

பாடம் தொடர்பாக அடிக்கடி சந்தேகம் கேட்கப் போனதில், உதவி பேராசிரியருக்கும் மாணவிக்கும் நட்பு அதிகரித்தது. ஒருகட்டத்தில், காதலாக மலர்ந்தது. இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்குத் தெரிய வந்தததை அடுத்து, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisment

உடனடியாக மகளுக்குத் திருமணம் செய்து வைக்கவும் மாணவியின் பெற்றோர் திட்டமிட்டு இருந்தனர். பெற்றோர் தரப்பில் நெருக்கடி அதிகரித்து வந்ததை அடுத்து, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, உதவி பேராசிரியரும், மாணவியும் திடீரென்று ஓட்டம் பிடித்தனர்.

இதையறிந்த மாணவியின் பெற்றோர், சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் தன் மகளை, உதவி பேராசிரியர் கடத்திச் சென்றதாக புகார் அளித்தனர். காவல்துறையினர் அவர்களைத் தேடி வந்த நிலையில், அவர்கள் இருவரும் மாலையும் கழுத்துமாக இரும்பாலை காவல் நிலையத்தில் ஜன. 30- ஆம் தேதி ஆஜராகினர்.

மாணவியின் பெற்றோர் வீட்டுக்கு வருமாறு அழைத்தபோது, இனிதன் காதல் கணவரான உதவி பேராசிரியருடன்தான் வாழ்வேன் என்று கூறிவிட்டார். இதையடுத்து மாணவி மற்றும் அவருடைய பெற்றோரிடம் எழுதி வாங்கிய காவல்துறையினர், உதவி பேராசிரியருடன் மாணவியை அனுப்பி வைத்தனர்.

Advertisment

தன்னிடம் படித்து வந்த மாணவிக்கே காதல் வலை வீசி, கரம் பிடித்த உதவி பேராசிரியரின் நடவடிக்கை பல்கலைக்கழக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.