salem district incident govet hospital police court

சேலம் அருகே உள்ள தளவாய்ப்பட்டி சித்தனூரைச் சேர்ந்தவர் காத்தவராயன். இவருடைய மகன் மணிகண்டன் (32). கடந்த 2012- ஆம் ஆண்டு டிசம்பர் 10- ஆம் தேதி அப்பகுதியில் தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் இரும்பாலை காவல்துறையினர், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisment

வழக்கு விசாரணை நடந்த நிலையில், சித்தனூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கிராம நிர்வாக அலுவலரிடம் நேரில் ஆஜரானார். அப்போது அவர், தான் உள்பட நான்கு பேர் சேர்ந்து மணிகண்டனை தடியால் தாக்கியதாக வாக்குமூலம் அளித்திருந்தார். அதையடுத்து, மணிகண்டனின் சந்தேக மரண வழக்கைக் கொலை வழக்காக மாற்றி ஃஎப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். மேலும், கோவிந்தராஜையும் கைது செய்தனர்.

Advertisment

இடையில் என்ன நடந்ததோ, இரும்பாலை காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக சேலம் 1- ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோது அதில், மணிகண்டனுக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்ததால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக பதிவு செய்திருந்தனர்.

இதனால் ஏமாற்றம் அடைந்த மணிகண்டனின் தாயார் சகுந்தலா, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை முதலில் விசாரித்த டி.எஸ்.பி., 8 இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வந்த நிலையில், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மணிகண்டனின் உடலைத் தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. வட்டாட்சியர் பிரகாஷ், சி.பி.சி.ஐ.டி. காவல்துறை டி.எஸ்.பி. கிருஷ்ணன், ஆய்வாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டப்பட்டது.

சடலத்தை பிளாஸ்டிக் உறையில் வைத்து புதைத்து இருந்ததால், அழுகிய நிலையில் கிட்டத்தட்ட முழு உடலாகவே சடலம் கிடைத்தது. சேலம் அரசு மருத்துவமனையின் சட்டம் சார்ந்த மருத்துவர் கோகுலரமணன் சம்பவ இடத்திலேயே உடற்கூறாய்வு செய்தார். சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டிய குழியில் இருந்து மணிகண்டனின் மண்டை ஓடு, எலும்புகள் கிடைத்தன. அவற்றை தடய அறிவியல் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

http://onelink.to/nknapp

இந்த வழக்கில் முன்பு சரணடைந்த கோவிந்தராஜ், ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். சந்தேக வழக்கு என்று இருந்ததை பின்னர் கொலை வழக்காக பதிவு செய்ததோடு, ஒரு குற்றவாளியையும் கைது செய்த காவல்துறையினர், பின்னர் எதற்காக மாரடைப்பில் இறந்ததாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற கேள்வியால் சேலம் காவல்துறையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.