Skip to main content

கரோனா முன்னெச்சரிக்கை: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்கள் வீடுகளுக்கே நேரடி விற்பனை! 

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

salem corporation

 

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையாக 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 15 கோட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 17 இடங்களில் வசிக்கக்கூடிய பொதுமக்கள், அத்தியாவசியப் பொருள்களைப் பெறுவதற்கு ஏதுவாகச் சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

 

கரோனா நோய்த்தடுப்புப் பணிகளில் சேலம் மாநகராட்சி நிர்வாகம், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாநகரில் பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

 

வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சேலத்திற்குள் வருபவர்களுக்கு அதிகளவில் நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, 'வெளியில்' இருந்து வருபவர்களைக் கண்காணித்து மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வசதியாக கருப்பூர் அரசுப் பொறியியல் கல்லூரி, பென்னம்மாபேட்டையில் உள்ள ஐ.ஐ.ஹெச்.டி. கல்லூரி வளாகம், கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தும் பகுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, முடிவுகள் வெளியான பிறகே மாநகர பகுதிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

 

இ-பாஸ் அனுமதியின்றி 'வெளியில்' இருந்து வருவோர் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்போர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, உரிய அனுமதியின்றி சேலத்துக்குள் நுழைந்த 34 பேர் மீது காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்தவர்கள்; சேலத்தை வசிப்பிடமாகக் கொண்டு பணி நிமித்தமாக வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களில் தங்கியிருந்து மாநகரப் பகுதிகளில் நுழைந்தவர்களில், கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் நேரடியாக, மறைமுகமாக தொடர்பில் இருந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் 17 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அப்பகுதிகளில் தீவிர நோய்த்தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் ஐந்து வேளைகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுக்கழிப்பறைகள் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, மூன்று முறை சுத்தம் செய்யப்படுகிறது. அப்பகுதிகளில் சேகரமாகும் திடக்கழிவுகள் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டு வருகிறது. 

 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஹோமியோபதி மாத்திரைகள், வீடுகளை தூய்மையாக பராமரிப்பதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் பிளீச்சிங் பவுடர்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடுகளில், தனிமைப்படுத்தப்பட்டவர்களை மாநகராட்சி அலுவலர்கள் தினந்தோறும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட 17 இடங்களிலும் வெளியாள்கள் உள்ளே செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காகவோ அல்லது பிற எவ்வித நிகழ்விற்காகவும் இருப்பிடங்களை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 

அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பால், மருந்து பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளது.

 

அத்தியாவசியப் பொருள்களை பெறுவதற்கு ஏதுவாக ஒவ்வொரு மண்டலத்திலும் சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் விவரங்களை பின்வரும் தொலைபேசி எண்களில் தெரிவித்தால், வீடுகளுக்கே வந்து விற்பனை செய்யப்படும்.

 

சூரமங்கலம் மண்டலம் - 0427 2387514, 2387595

 

அஸ்தம்பட்டி மண்டலம் - 0427 2314646, 2310095

 

அம்மாபேட்டை மண்டலம் - 0427 - 2263161, 2250300

 

கொண்டலாம்பட்டி மண்டலம் - 0427-2461616, 2461111

 

http://onelink.to/nknapp


கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி சார்பில், அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வீடுகளுக்கே வரவழைத்துப் பெற்றுக்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு மாநகராட்சி ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேதனையைப் பகிர்ந்த பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை; உத்தரவிட்ட தமிழக முதல்வர்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Padma Sri Chinnapillai who shared the anguish; Tamil Nadu Chief Minister assured

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் மத்திய அரசு சார்பில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை வீடு வழங்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்த செய்தியை கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சின்னப்பிள்ளைக்கு உடனடியாக வீடு வழங்க மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சின்னப்பிள்ளைக்கு புதிதாக வீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடு கட்டுமான பணியானது இந்த மாதமே தொடங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.

Next Story

“மழை வெள்ளத்தினால் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்களின் கவனத்திற்கு” - முதல்வர் முக்கிய உத்தரவு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Attention of owners of houses damaged by rain and flood 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் புயல், மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மக்களின் சேதமடைந்த வீடுகளைப் பழுது நீக்கம் மற்றும் கட்டுமானத்திற்காக நிவாரணம் வழங்குதல் தொடர்பாகத் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாகச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டங்களில் வசித்து வந்த பெரும்பாலான ஏழை மக்களின் வீடுகள் பெரிதும் சேதமுற்றன.

இவ்வாறு மழை வெள்ளத்தினால் பகுதியாகச் சேதமடைந்த வீடுகளைப் பழுது பார்ப்பதற்கு ரூ. 2 இலட்சம் வரையும் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ. 4 இலட்சம் வரையும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியாக மற்றும் முழுமையாகச் சேதமடைந்த 955 வீடுகளுக்குப் பழுது நீக்கம் செய்யவும் மற்றும் புதிய கட்டுமானத்திற்கும் ரூபாய் 24.22 கோடியும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 577 சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 21.62 கோடியும் ஆக மொத்தம் ரூ. 45.84 கோடி வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.