கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.
இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 43 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய மரண சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்திருக்கும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வரும் 24ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 'முழு மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி வரும் 24ம் தேதி சென்னையில் விசிக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. பலர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டப்பகலில் கள்ளச்சாராயம் விற்பனை ஆகிறது. இது அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. மெத்தனால் எளிதாக கிடைக்கும் பொருள் அல்ல, ஆனால் கள்ளச் சந்தையில் விற்பனை ஆகிறது' என தெரிவித்துள்ளார்.