தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, தலைமையில், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார், திண்டுக்கல் மாநகராட்சி இளமதி ஜோதிபிரகாஷ் ஆகியோர் முன்னிலையில், திண்டுக்கல் எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனைப் பட்டா(பிசிஆர்) 12 பயனாளிகளுக்கு ரூ.35.05 இலட்சம் மதிப்பீட்டிலும், தையல் இயந்திரம் 11 பயனாளிகளுக்கு ரூ.74,000 மதிப்பீட்டிலும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஓய்வூதியம் 4 பயனாளிகளுக்கு ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டிலும், நலவாரிய அட்டை 18 பயனாளிகளுக்கும், இலவச வீட்டுமனைப்பட்டா 25 பயனாளிகளுக்கு ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டிலும், பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன உரிமை பட்டா 92 பயனாளிகளுக்கும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம்(தாட்கோ) சார்பில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் திட்டத்தில் 11 பயனாளிகளுக்கு ரூ.74.76 இலட்சம் மதிப்பீட்டிலும், பிம்ஏஜெஏஒய் திட்டத்தில் ஒரு பயனாளிக்கு ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டிலும், சி.டபிள்யூ.டபிள்யூ.பி திட்டத்தில் 2 பயானளிகளுக்கு ரூ.29,000 மதிப்பீட்டிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) சார்பில் அமுதசுரபி கடன் திட்டத்தில் 13 பயனாளிகளுக்கு ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டிலும், இயற்கை வேளாண் திட்டத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டிலும், சமுதாய முதலீட்டு நிதியில் 19 பயனாளிகளுக்கு ரூ.7.15 இலட்சம் மதிப்பீட்டிலும், வட்டார வணிக வளமையம் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டிலும், வங்கி கடன் இணைப்பு 5 பயனாளிகளுக்கு ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டிலும், நலிவுற்றோர் மேம்பாட்டு நிதி 3 பயனாளிகளுக்க ரூ.60,000 மதிப்பீட்டிலும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் துறை சார்பில் புதிய மின்னணு குடும்ப அட்டை 10 பயனாளிகளுக்கும், கால்நடை பராமரிப்புக்கடன் 34 பயனாளிகளுக்கு ரூ.12.08 இலட்சம் மதிப்பீட்டிலும், கேசிசி திட்டத்தில் 96 பயனாளிகளுக்கு ரூ.1.39 கோடி மதிப்பீட்டிலும், தமிழ்நாடு தொழில் வணிக துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.64.25 இலட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை திட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ.11.72 இலட்சம் மதிப்பீட்டிலும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 9 பயனாளிகளுக்க ரூ.11.40 இலட்சம் மதிப்பீட்டிலும், மாநில தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தில் 2 பயனாளிகளுக்கு ரூ.20,000 மதிப்பீட்டிலும், மானாவரி மேம்பாட்டுத் திட்டத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் நுண்கடன் நிதி 3 பயனாளிகளுக்கு ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரம் 8 பயனாளிகளுக்கு ரூ.51,000 மதிப்பீட்டிலும் என ஆகமொத்தம் 415 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு தலைக்கவசம் ரூ.450 மதிப்பிலும், ஒளிரும் அங்கி ரூ.200 மதிப்பிலும், கால் உறை ரூ.650 மதிப்பிலும், கையுறை ரூ.150 மதிப்பிலும், முகக்கவசம் ரூ.50 மதிப்பிலும் என மொத்தம் ரூ.1,500 மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள், துப்புரவு பணியை இயந்திரமயமாக்கல் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
இந்த விழாவில், அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, "தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியது மட்டுமின்றி சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அண்ணல் அம்பேத்கர் நினைவு தினமான இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, தொழிலாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றிட வழிவகை ஏற்படுத்தியுள்ளார். தூய்மைப் பணியாளர்களை பெருமைப்படுத்தியுள்ளார். மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை மாற்றியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். அவர் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு, தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் உயர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தந்தை பெரியார் ஜாதி, மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்கிட பாடுபட்டார். அவர் வழியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஜாதி, மத பேதமற்ற சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில், அனைத்து ஜாதியினரும் ஒன்றாக வாழ வழிவகை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சமத்துவபுரங்களை ஏற்படுத்தினார். கலைஞர் அவர்கள் ஆட்சிகாலத்தில்தான் தமிழ்நாட்டில் அம்பேத்கருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் 8 இடங்களில் சமத்துவபுரங்கள் அமைக்க அனுமதியளித்து, நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 100 வீடுகளுடன் சமத்துவபுரம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசு நகரப் பேருந்துகளில் மகளில் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.18 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் குடிசைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் வழங்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8.00 இலட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படவுள்ளது. தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 17.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது 2.24 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல் முதியோர் உதவித்தொகை ரூ.1000 என்பது ரூ.1,200ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1000 என்பது ரூ.1,500ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது, மேலும், அதிகளவு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலம் வீடற்ற ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் பொருட்டு 2023-2024 மற்றும் 2024-2025-ஆம் ஆண்டுகளில் 250 நபர்களுக்கு நேரடி பேச்சுவார்த்தை மூலம் நிலம் தேர்வு செய்து பட்டா வழங்கப்பட்டுள்ளது. 2023-2024 ஆம் கல்வியாண்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் 38,780 மாணவ, மாணவிகளுக்கு ரூ.28.45 கோடி மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மக்களுடன் முதல்வர் திட்டத்தில் வரப்பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 102 நபர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு தீருதவித்தொகை, ஓய்வூதியம் மற்றும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.2.31 கோடி மதிப்பீட்டிலான தீருதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2024-2025 ஆம் கல்வியாண்டில் இவ்வலுவலகத்திற்குட்பட்ட 42 விடுதிகளில் 1767 மாணவ, மாணவிகள் சேர்ந்து பயன் பெற்று வருகின்றனர். ஆதிதிராவிடர் மக்களுக்கான உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் அயோத்திதாசபண்டிதர் குடியிருப்புதிட்டம் வாயிலாக 2024-2025 ஆண்டிற்கு ரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் வழியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார் என்று கூறினார். அதற்கு முன்பாக அண்ணல் அம்பேத்கர் உருவப்படத்திற்கு அமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.