Sahitya Akademi award announcement for writer Devibharathi!

24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுக்குத்தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, சால்வை மற்றும் செப்புப் பட்டயம் ஆகியவை வழங்கப்படும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெறுவோர் பட்டியல் இன்று (20.12.2023) டெல்லியில் வெளியிடப்பட்டது.

Advertisment

அதன்படி தமிழ் மொழியில் வெளியான ‘நீர்வழிப் படூஉம்’ நாவல் 2023 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுக்குத்தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் தேவிபாரதி ஆவார். ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் தேவிபாரதி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்துறையில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கான விருது மற்றும் பரிசுத்தொகை வரும் மார்ச் மாதம் 12 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் எழுத்தாளர் தேவிபாரதிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “2023 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க சாகித்ய அகாடமி விருதை தனது நீர்வழிப் படூஉம் தமிழ் நாவலுக்காக வென்ற பிரபல எழுத்தாளர் ராஜசேகரன் தேவிபாரதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன், “தமிழுக்கான இவ்வாண்டின் சாகித்ய அகாடமி விருதை வென்றிருக்கும் எழுத்தாளர் தேவிபாரதியை மனமார வாழ்த்துகிறேன். நாற்பத்து நான்கு ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவருக்கு இந்த கௌரவம் மிகவும் பொருத்தமானது. தான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தின் நுணுக்கமான விவரங்களை, கலாப்பூர்வமாகவும் நுட்பமாகவும் சித்திரிக்கும் இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார் தேவிபாரதி.

Advertisment

சிறுகதைகளில் சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய தேவிபாரதி, நாவல் பக்கம் திரும்பி, அந்த எழுத்திலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ், நொய்யல் போன்ற நாவல்களில் தன் மக்களின் எழுத்துச் சித்திரத்தை சுவாரசியம் குன்றாமல் வரைந்தார். சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் அவர் எழுதியிருக்கும் புதினமான நீர்வழிப் படூஉம் என்னும் படைப்புக்கு விருது கிடைத்திருப்பது வாழ்த்துக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.