Skip to main content

ஆளுங்கட்சிக்கு நிர்வாகத் திறமை இல்லை... கவுன்சிலர்கள் கூட்டத்தில் சலசலப்பு!

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

kadaloor

 

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய சேர்மன் செல்வி ஆடியபாதம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் மனோகரன், ராஜலட்சுமி, முத்துக்கண்ணு, சிவக்குமார், ஏழுமலை, முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதில் கவுன்சிலர்கள் பரிந்துரை செய்யும் பயனாளிகளுக்கு மத்திய அரசின்  'ஜீவன் தாரா கிணறு' வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், ஒன்றியத்தில் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யாததால், பல்வேறு நலத்திட்டப் பணிகள் செயல்படுத்த முடியாமல் உள்ளன. இதனால், தேர்தலின்போது மக்கள் எங்களிடம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, அரசும் மாவட்ட நிர்வாகமும் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பல்வேறு கவுன்சிலர்களும் கோரிக்கையை முன்வைத்து பேசினார்கள்.

 

அப்போது நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் நாகராஜன், ஆளுங்கட்சிக்கு நிர்வாக திறமை இல்லாததே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டி பேசினார். இதனால், அதிருப்தியடைந்த அ.தி.மு.க கவுன்சிலர் முத்து, மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு வழங்காததற்கு ஆளும் கட்சிக்கு நிர்வாகத் திறமை குறைவு என்று கூறுவது அர்த்தம் இல்லாதது என்று மறுத்துப் பேசினார். இதனால், இருவருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

அவர்களை சமாதானப்படுத்திவிட்டு பேசிய சேர்மன் செல்வி ஆடியபாதம் ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகளைச் செயல்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்துள்ளோம். விரைவில் கூடுதல் நிதி ஒதுக்கீடு பெற்று வார்டு வாரியாக ஒன்றிய கவுன்சிலர்கள் மூலம் மக்கள் முன் வைத்த கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, திட்டம் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்க்கொள்ளப்படும் என்று கூறினார்.

 

Ad

 

இந்தக் கூட்டத்தின் போது துணை சேர்மன் ஜான்சி மேரி மற்றும் அதிகாரிகள் தரப்பில் ஒன்றிய ஆணையர்கள் காமராஜ், ஜெயகுமார், மேனேஜர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுக்கடுக்காய் குற்றச்சாட்டு; “பதவி விலகுகிறேன்...” - தி.மு.க. கவுன்சிலர்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Vellore DMK councilor has said that he will resign

 

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சியில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமையில் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் துணை மேயர் சுனில் மற்றும் ஆணையர் ஜானகி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

இதில் ஒன்றாவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் அன்பு பேசுகையில், “தெருவிளக்குகள் எரிவதில்லை. அது குறித்து பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கழிவுநீரும் குடிநீர் கலந்து வருகிறது. சாலைகள் சீர் செய்யப்படவில்லை. மொத்தத்தில் ஒரு பணி கூட நடக்கவில்லை” எனக் குற்றம்சாட்டி பேசினார். 

 

Vellore DMK councilor has said that he will resign

 

இதேபோன்று காட்பாடியைச் சேர்ந்த திமுக ஒன்றாவது மண்டலக் குழு தலைவர் புஷ்பலதா பேசுகையில், “மாநகராட்சி, மக்கள் பணிகளை சரிவர செய்வதில்லை. மக்கள் மாமன்ற உறுப்பினராகிய எங்களை சரமாரியாக கேள்வி கேட்கின்றனர். என்ன பதில் சொல்ல முடியும்? தெருவிளக்குகளும் எரிவதில்லை. சாலை வசதி குடிநீர் போன்ற வசதிகளுமில்லை. நான் இந்த குறைகளை மீண்டும் மீண்டும் தெரிவிக்கிறேன் இவற்றை சரி செய்யவில்லை என்றால் எனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளேன்” என்றார்.

 

திமுக மண்டலக் குழு தலைவரே மாமன்றக் கூட்டத்தில் இப்படி பேசியதால், மாமன்றத்தில் உள்ள மற்ற திமுக மாமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

 

Next Story

நகராட்சி நிர்வாகக் கூட்டம்; புறக்கணிக்கப்பட்ட பெண் கவுன்சிலர்கள்

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

Women representatives are ignored in the municipal administration meeting

 

ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகக் கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நகராட்சியிலுள்ள வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது நகராட்சியில் நடைபெற உள்ள வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் நகராட்சியில் உள்ள பல்வேறு வார்டு பகுதிகளில் ஒரு கோடி ரூபாய் செலவில் சாலை சீர்திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தனர்.

 

அப்போது பெண் கவுன்சிலர்கள் இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். பெண் கவுன்சிலர்கள் வெற்றி பெற்ற மூன்று வார்டுகளில் சாலை பணிகள் செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதை கண்டித்து நகர்மன்றக் கூட்டத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘பெண் கவுன்சிலர்களை புறக்கணிப்பது நியாயம் தானா? ஜெயங்கொண்டம் நகராட்சியில் நகராட்சி பொது நிதி மற்றும் கலைஞர் மேம்பாட்டு நிதியில் சாலை பணிகளுக்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நகராட்சி அதிகாரிகள், பெண் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ள வார்டுகளான 4, 17, 20 ஆகிய வார்டுகளை முற்றிலும் புறக்கணித்ததை கண்டிக்கிறோம்’ எனக் கூறி அவர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.